பக்கம் எண் :

பேய்க் கூட்டம்

மூன்றா நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, நான் எந்தக் காரணத்தாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வராது போனால் அருவியை நினைத்துக் கொண்டு அது சலசலவென்று விழும் ஓசையிலே மானஸிகமாகச் செவியைச் செலுத்திக் கொண்டிருந்தால் சிறிது நேரத்திற்குள் தூக்கம் வந்துவிடுமென்று நான் குழந்தையாயிருந்தபோது ஒரு புஸ்தகத்தில் படித்திருந்தேன். அந்தப்படி அருவியை நினைத்தால் பாதி இரவில் அந்த ஞாபகத்திலிருந்து குளிர் அதிகப்படுகிறதே யொழியத் தூக்கம் வருகிற பாட்டைக் காணோம்.

என்ன காரணம்? குளிர்தான் காரணமென்றெண்ணி நான்கு சாளரங்களையும் சாத்தினேன். பிறகு காற்றோட்டமில்லாத அறையில் படுத்திருக்கக் கூடாதென்று வெள்ளைக்கார சுகாதார சாஸ்திரமும் சற்றேறக் குறைய - அனுபவமும் சொல்லுவதால், ஒரு ஜன்னலைத் திறந்தேன்.

வாசற்பக்கத்தில், என் அறைக்கு நேரே, "காந்தவிளக்கு" (எலெக்ட்ரிக் விளக்கு). அதை மின்னல் விளக்கென்று சொல்வது நியாயம். ஆனால் ஜனங்கள் அதைக் காந்த விளக்கென்று சொல்லுகிறார்கள். ஊரோடொக்க ஓடு என்று தர்ம புத்திரர் சொல்லியது போலே நானும் ஜன வழக்கத்தைப் பெரிதாகக் கொண்டு அதைக் காந்த விளக்கு என்றே சொல்லுகிறேன். மேலும் காந்தம் என்ற சொல் அழகாக இருக்கிறது. காந்தி, கந்தன், காந்தை என்ற பிரயோகங்கள் அதிலே நினைவுக்கு வருகின்றன. வாசலில் காந்த விளக்குப் போட்டிருக்கிறது. அதைச் சுற்றி விளையாடும் பூச்சிக் கூட்டங்கள் என் அறைக்குள்ளே பிரவேசித்து விடுகின்றன.