அறைக்குள் விளக்கை அவித்துப் போடுவோமா என்று யோசித்தாலோ, தூக்கமும் வராமல் இருளில் கிடப்பது மிகவும் சிரமம். என் மனம் பல பல விஷயங்களை யோசித்துக்கொண்டிருந்தது. கண்ணை மூடினால் எனக்கு ருஷியாவின் நிலைமை ஞாபகம் வந்துகொண்டிருந்தது. அதற்குக் காரணமென்ன தெரியுமா? ஒரு மனுஷ்யன் காலையில் கண்ணை விழிக்கும்போது விழித்தவுடனே, அவன் வேறெந்த வஸ்துவையும் பார்க்கு முன்னே அவன் முன் ஒரு குரங்கைக் கொண்டு நிறுத்தினால் அன்று முழுவதும் அவன் அந்தக் குரங்கை மறப்பது மிகவும் சிரமம். அதுபோலவே மூன்றாம் நாள் காலையில் நான் கண்ணை விழிக்கு முன்பாகவே என் பத்தினி "சுதேசமித்திரன்" பத்திரிகையைத் தலையணைக் கருகேகொண்டு போட்டிருந்தாள். திறந்து பார்த்தேன்...முதலாவது என் கண்ணில் "ருஷியாவில் உள்நாட்டுக் கலகம்; சச்சரவு அதிகரிக்கின்றது - "என்ற பகுதி தென்பட்டது. இதென்னடா விசேஷம் என்று வாசித்துப் பார்த்தேன். இரவில் தூக்கமில்லாது படுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் படித்த விஷயங்களெல்லாம் மற்றொரு முறை மன வீதியிலே உலாவி வரலாயின. மாஸ்கோ நகரத்தில் கலகம் - ஸ்திரீகளும் குழந்தைகளும் உட்பட்ட இருநூறு பேர் கொலையுண்டனர்...துப்பாக்கிப் பிரயோகங்கள் அமிதவாதிகளும், மிதவாதிகளும் பரஸ்பரம் செய்துகொண்டனர். ஒதெஸ்ஸா நகரத்தில் செல்வரிடமிருந்து பொருளையெல்லாம் பிடுங்கி ஏழை ஜனங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொடுக்க ஒரு கமிட்டி! முதலிய பல செய்திகள். ருஷியா விஷயம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தூங்க முயற்சி செய்தால் மனம் இணங்கவில்லை. தூக்கம் வரப்போகிற - அல்லது வராமல் இருக்கிற - பாதி இரவு நேரத்தில் மனம் புத்தி சொன்னபடி கேட்கவே கேட்காது. எப்போதும் மனதைக் கட்டியாள்வது சிரமம். |