பக்கம் எண் :

பேய்க் கூட்டம்

படுக்கையிலே படுத்துக் கொண்டு மனதைக் கட்ட விசுவாமித்திரராலேகூட முடியாது. பிறகு எனக்கு ருஷியாக் குடியரசின் தலைவனாகிய லெனின் என்பவனுடைய ஞாபகம் வந்தது. உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. லெனினுக்கு லக்ஷம் பக்கத்திலே!

தள்ளடா! லெனினுமாயிற்று; வெங்காயமுமாயிற்று; தூங்குவோம் என்று நினைத்தால் கொசு வந்து காதில் "ஙொய்" என்று ரீங்காரம் பண்ணுகிறது.

சரி தூக்கம் வருமென்று நினைக்க ஹேதுவில்லை; எழுந்து உட்கார்ந்து ஏதேனும் புஸ்தகம் வாசிப்போமென்று மேஜை மீது வைத்திருந்த விளக்கைப் பெரிதாக்கி எதிரே நாற்காலியில் உட்கார்ந்து மேஜையின் மீது முதலாவது கண்ணுக்குப் புலப்பட்ட புஸ்தகத்தைக் கையிலே எடுத்தேன். அது ஸ்காந்த புராணம். அதிலே நல்ல கட்டம் கண்ணுக்குப்புலப்பட்டது. தினைப்புனத்தில் வள்ளியம்மையைச் சுப்பிரமணிய ஸ்வாமி பல விதங்களில் கெஞ்சியும் பயமுறுத்தியும் பெண்டாகச் செய்து கொண்டார்.

பிறகு புராணம் சொல்லுகிறது: கேளீர் முனிவர்களே' அந்த வள்ளியம்மையானவள் திரும்பித் தனது பரணுக்கு வந்து சேர்ந்தாள். தினைப்புனத்தை அங்கே காத்துக் கொண்டிருந்த ஸகியானவள் வள்ளியை நோக்கி, "ஏனம்மா, வள்ளி, இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டாள்.

"குளத்துக்குப் போய் நீராடி வந்தேன்" என்று வள்ளியம்மை சொன்னாள்,

"நெடுநேரம் குளத்திலே இருந்தாயா? ஸ்நானத்துக்குச் சென்றால் இத்தனை காலம் ஆகிய முகாந்தரமென்ன?" என்று தோழி தொளைத்துத் தொளைத்துக் கேட்கலானாள். அப்போது வள்ளியம்மை சினங்கொண்டு, "ஏதடி பாங்கி, நீ என் மேல் பழி சுமத்தப் பார்க்கிறாயா?" என்றாள்.