வேதாரண்யம் என்ற ஊரில் விவேக சாஸ்திரி என்றொரு பிராமணன் இருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள். அந்த மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் வைத்துக் காப்பாற்றுவதற்குப் போதுமான நன்செய் நிலம் அவருக்கு இருந்தது. ஆனால் பிள்ளைகள், மூவருக்கும் விவாகமாய்த் தலைக்கு ஓரிரண்டு குழந்தைகளும் பிறக்கவே, குடும்பம் மிகப் பெரிதாகிவிட்டது. ஆதலால், அவருடைய முதுமைப் பிராயத்தில் ஜீவனத்துக்கு சிரமமுண்டாய் விட்டது. பிள்ளைகளுக்கு ஸம்ஸ்க்ருதப் படிப்புச் சொல்லி வைத்து ஒருவனை வேதாந்த சாஸ்திரத்திலும், மற்றொருவனை வியாகரணத்திலும், மூன்றாமவனைத் தர்க்க சாஸ்திரத்திலும் தேர்ச்சியோங்கும்படி செய்து வைத்திருந்தார். கால நிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க சம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தாராதலால், அரைவயிற்றுக்கு ஆகாரம் செய்து கொண்டு கஷ்டத்திலிருந்தார்கள். இப்படியிருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியாதென்று தெரிந்தவராகித் தம்முடைய மக்களை அழைத்துப் பின்வருமாறு சொல்லலானார்: - வாரீர், மக்களே, நான் சொல்லப் போவதை சாவதானமாகக் கேளுங்கள். என்னுடைய ஜீவன் இவ்வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்டது. |