பக்கம் எண் :

மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

இன்று மாலை வீட்டுக்குப் போகும்போது சம்பளம் கணக்குத் தீர்த்து வாங்கிக்கொண்டு போகலாம்? என்று சொன்னார். நான் சரியென்று விலகிவிட்டேன். இவ்வளவுதான் நடந்த சங்கதி.? அப்போது மாணிக்கஞ் செட்டி கேட்கிறான்:-

"உம்முடைய பெயரென்ன?"

மானி - "என்னுடைய பெயர் மானி அய்யன்."

செட்டி -"உமது பிதாவின் பெயரென்ன?"

மானி - "அவர் பெயர் சீதாராமையர்."

செட்டி - "அவர் உயிரோடிருக்கிறாரா?"

மானி - "இல்லை; இறந்து போய்விட்டார்.?

செட்டி - "வீட்டிலே தாயார் இருக்கிறார்களா?"

மானி - "ஆம்." செட்டி - "இன்னும் எத்தனை பேருண்டு, குடும்பத்திலே?"

மானி - "வேறு யாரும் கிடையாது. எனக்குக்கூடக் கலியாணம் ஆகவில்லை.

இதைக் கேட்டு செட்டி நகைத்தான்.

"ஏன் ஐயரே! கலியாணம் ஆகவில்லையென்று வருத்தந்தானோ? பார்ப்பாரப் பிள்ளைகளுக்கு வயிற்றுச் சோறு தேடு முன்பாகவே பெண்டாட்டி பிள்ளைகள் இல்லாவிட்டால் சுகப்படாது. குடும்பத்தை முதலாவது பெரிதாகச் செய்து வைத்துக் கொண்டால் பிறகு பிச்சை யெடுப்பது சுலபம். ஆள் கூட்டம் அதிகமாகத் திரட்டிக்கொண்டு மேளதாளத்துடன் பிச்சைக்குப் போகலாம்? என்றான்.