மானி - "செட்டியாரே! எனக்கு விவாகத்திற்குப் பணவுதவி செய்யும்படி உங்களிடம் யாசகத்துக்கு வரவில்லை. வேலை செய்தால் சம்பளமுண்டோ என்று கேட்க வந்தேன். இல்லை யென்றீர்கள். நான் திரும்பிப் போனேன். போனவனை மறுபடியும் அழைத்துப் புண்படுத்த வேண்டாம்.? செட்டி - "எத்தனை வயதிலே விவாகஞ் செய்து கொள்வீர்?" மானி - "அதைப்பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை." செட்டி - "உம்முடைய தாயார் யோசிக்கவில்லையா?" மானி - "எனக்குத் தெரியாது." செட்டி - "கலியாண விஷயத்திலே தாயார் வார்த்தை தானே கேட்பீர்?" மானி - "நிச்சயமில்லை." செட்டி - "பின், என்ன செய்வீர்?" மானி - "நான் குடும்ப சம்ரக்ஷணைக்கு முயற்சி வேண்டி அலைகிறேன். தாங்கள் சம்பத்திலிருக்கிறீர்கள். உங்களுக்கு சந்தோஷமாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க நேரமிருக்கிறது. என்னைப் பகவான் அந்த நிலையில் வைக்கவில்லை.? செட்டி - "ஐயரே! வீட்டுக்குப் போகவேண்டுமா? அவசரமா? இன்று போஜனச் செலவுகளுக்கு ஒன்றும் வேண்டாமோ?" என்றான். இதைக் கேட்டவுடன் மானிக்குக் கோபமுண்டாய்விட்டது. |