மானி அய்யன் சொல்லுகிறான்: - "செட்டியாரே, மீனாக்ஷியம்மையின் கிருபையால் நமது வீட்டிலே, இன்னும் அநேக மாதங்களுக்கு வேண்டிய உணவு சேர்த்திருக்கிறேன். என்னுடைய தாயார் பேருக்குக் கொஞ்சம் நிலமும் உண்டு. இவ்விடத்தில் நமது முயற்சி நிறைவேற வழியில்லா விட்டால் வேறிடத்துக்குப் போகலாமே, இங்கிருந்து வீண் வார்த்தை சொல்வது நியாயமில்லையென்ற கருத்தின்மேல் நான் அவசரப்பட்டேன், அதைத் தவிர வேறொன்றுமில்லை. இப்போது, தாங்கள் கேள்வி கேட்டு வரும் மாதிரியைப் பார்க்கும்போது, இன்னும் சற்று நேரம் இங்கிருந்து தங்களுக்குச் சில விஷயங்கள் சொல்லிவிட்டுப் போகலாமென்ற எண்ண முண்டாகிறது. நம்மூர் வியாபாரிகள் விஷயமாக, எனக்குள்ள சில கருத்துக்களைத் தங்களைப்போன்ற மனிதரிடம் சொல்லித் தீர்த்தாலொழிய என் மனம் ஆறுதலடைய மாட்டாது. வேலைக்குக் கேட்க வந்த இடத்திலே அதிகப் பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாதென்று நினைத்தேன். தாங்கள் தொளைத்துத் தொளைத்துக் கேட்பதைப் பார்த்தால், தங்களுக்கு இப்போது உல்லாச நேரம் போலே தோன்றுகிறது. ஆகையால் உங்களிடமே சொல்லலாமென்று தீர்மானம் செய்கிறேன்.? அதற்கு மாணிக்கஞ் செட்டி -"சொல்லும் ஐயரே, மனதுக்குள் வைத்துக் கொண்டு குமைய வேண்டாம். பணம் தேடி வைத்தவர்களைத் தேடத் திறமில்லாதவர் எப்படிக் கெல்லாம் சீர்திருத்த உத்தேசங் கொண்டிருக்கிறார்களென்பதைக் கண்டுபிடிப்பதிலே எனக்கும் ருசியுண்டு. சொல்லும், உம்முடைய கொள்கைகளைக் கேட்போம்? என்றான். |