மானி அய்யன் - "வடக்கு தேசத்திலிருந்து சில வியாபாரிகள் இங்கே அடிக்கடி வருகிறார்கள். அவர்களுடன் நான் கொஞ்சம் வழக்கப்பட்டிருக்கிறேன். அவர்களுக்குள்ள வியாபாரத் திறமையும் புத்தி நுட்பமும் நம்மூர் வியாபாரிகளிடமில்லை. இது முதலாவது சொல்ல வேண்டிய விஷயம். இவ்விடத்து வியாபாரிகளிடம் இருக்கிற கருவத்துக்குத் தகுந்தபடி புத்திசாலித்தனமில்லை. இனி, இரண்டாவது விஷயம் சொல்லுகிறேன். க்ஷேமத்துடனும் செழிப்புடனும் ஊர் இருந்தாலொழிய வியாபாரம் செழிக்காது. வியாபாரத்துக்கு மகிமை வரவேண்டுமானால் ஊருக்கே ஒரு மகிமை வரவேண்டும். இந்த விஷயம் இதுவரை தங்களிடம் எவனும் சொல்லியிருக்க மாட்டான்.? மாணிக்கஞ் செட்டி - "எனக்கே தெரியும். இந்த ரகஸ்யம் யாரும் சொல்ல வேண்டியதில்லை. சரி, மேலே கதையை நடத்தும்.? மானி அய்யன் - "கதையில்லை, செட்டியாரே, காரியம். இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக் குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டுவோனையும், தலையிலே வைத்து, சாமர்த்திய முள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?" |