மாணிக்கஞ் செட்டி - "ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். குமாஸ்தாக்களிடமுள்ள குற்றத்தைச் சொன்னால், உமக்கு விஷயம் பூராவாகத் தெரியும். குமாஸ்தாக்களிடம் நாணயமில்லை. பணக்கார பிள்ளைகள் வெளியே ஒரு கடையில் சிறிய சம்பளம் வாங்கி வேலை பழகப் போவது கௌவரக் குறைவென்ற மூட எண்ணத்தால் கிடைப்பதில்லை. வருவோனெல்லாம் கோவணாண்டி; பணப் பொறுப்பையும் காரியப் பொறுப்பையும் அவர்களிடம் அதிகமாக ஒப்புவிக்க இடமில்லை. அவர்களுக்குக் குற்றேவல் செய்து தயவு சம்பாதிப்பதிலே தான் உற்சாக முண்டாகிறது. உழைப்பிலும் கருத்திலும் உற்சாகமில்லை. எப்படியிருந்தாலும், ஏழைக்கு ஏழைப் புத்திதானே ஏற்படுங்காணும்? நமது பந்துவாக இருந்தால் மூடனானாலும் அதிக வஞ்சனை பண்ணமாட்டானென்று நினைக்கலாம்.? மானி அய்யன் - "அதுதான் நினைக்கக் கூடாது. `உடன் பிறந்தார் சுற்றத்தாரென்றிருக்க வேண்டா; உடன் பிறந்தே கொல்லும் வியாதி? என்ற வசனம் கேட்டதில்லையோ?" மாணிக்கஞ் செட்டி - "தெரியுங்காணும்! ஆகவே இரண்டும் கஷ்டமாகிறது. மடத்தாண்டி கையிலே பணத்தைக் கொடுப்பது புத்திசாலித்தனமா? ஊரான் கெடுத்துக் கெடுவதைக் காட்டிலும் நம்மவனால் கெடுவோமே!? மானி - "செட்டியாரே, கெடவா வியாபாரம் பண்ணுகிறோம். ஜீவிக்க வியாபாரம் செய்கிறோம். ஓரிடத்திலே தக்க காரியஸ்தன் கிடைக்காவிட்டால் மற்றோரிடத்திலிருந்து தருவித்துக் கொள்ள வேண்டும். எந்தக் கணக்குக்கும் ஒரு தீர்வையுண்டு; எந்தச் சிக்கலுக்கும் அவிழ்ப்புண்டு.? இவ்வாறு மானி அய்யன் சொல்லியதைக் கேட்டு, மாணிக்கஞ் செட்டி சிறிது நேரம் யோசனை செய்யலானான், |