பக்கம் எண் :

மாதர் - பெண் விடுதலை (2)

அடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலைகொடுத்தால், அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு,அண்டச் சுவர்கள் இடிந்து போய் ஜகத்தே அழிந்துவிடும்என்று சொல்லுதல் அவர்களை அடிமைப்படுத்திஆள்வோருடைய ஸம்பிரதாயம்.

இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ,பெண் கல்வி தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது.அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரைகூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால்,இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால்,ஏழுலோகமும் கட்டாயம் இடிந்து பூமியின்மேல் விழும்என்றும், வால் நக்ஷத்திரம் வகையராக்களெல்லாம் நடுவிலேஅகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர்நடுங்குகிறார்கள். 'மதறாஸ் மெயில்' போன்ற ஆங்கிலேயப்பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம்கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். ''ஓஹோ!ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால்பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர்மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள்.அப்பால், மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும்மலையாளிகளையும் தின்றுவிடுவார்கள். பிறகு மலையாளிகள்தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும்,"சூர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்காளிஎலும்புகளை மலையாகப் புனைவர்' என்று சொல்லிப் பெருமூச்சுவிடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர்,கேசவப்பிள்ளை, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போய்க்கேளுங்கள். 'அப்படி பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது.ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால்அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம்நீங்கும் அவ்வளவுதான்' என்று சொல்லுவார்கள்.

அதுபோலவே, பெண்களுக்கு விடுதலைகொடுத்ததனால் ஜனசமூகம் குழம்பிப் போய்விடும் என்றுசொல்லுவோர், பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன்வாழ்வதை தாம் பார்க்கக்கூடாதென்று அசூயையால்சொல்லுகிறார்களேயொழிய வேறொன்றுமில்லை. விடுதலைஎன்றால் என்ன அர்த்தம்? விடுதலை கொடுத்தால் பிறஸ்திரீகள் என்ன நிலையில் இருப்பார்கள்? பெண்களுக்குவிடுதலை கொடுக்க வேண்டும் என்றால் என்னசெய்யவேண்டும்?  வீடுகளை விட்டு வெளியேதுரத்திவிடலாமா? செய்யவேண்டிய விஷயமென்ன என்றுபலர் சங்கிக்கலாம். இங்ஙனம் சங்கையுண்டாகும்போதுவிடுதலையாவது யாது  என்ற மூலத்தை விசாரிக்கும்படிநேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகுசுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும்,வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின்பயனைத் திருடாமலும், மற்றபடி ஏறக்குறைய ''நான் ஏதுபிரியமானாலும் செய்யலாம்'' என்ற நிலையில் இருந்தால்மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும்''பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம்செய்யலாம் என்பதே விடுதலை'' என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்சொல்லுகிறார்.