''காண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல்எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும்இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தேதானுள்ளது'' என்பது அக்குறளின் பொருள். இதனுடன்உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேரஇன்பமளிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களளைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஆதலால்,நான்கு புருஷார்த்தங்களுள், அதாவது மனிதப் பிறவிஎடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும் பயன்களைக்கணக்கிடப் புகுந்த இடத்து நம் முன்னோர் காதலின்பத்தையேஇன்பமென்னும் பொதுப் பெயரால் சொல்லி யிருக்கிறார்கள்."இங்ஙனம் இன்பமொன்றை பொதுப்பெயரால் சிறப்பித்துக்கூறத்தக்க பெருஞ் சுவைத் தனியின்பம் மனிதனுக்குக்காதலின்பமே யாகுமென்பதையும், அவ்வின்பத்தைதவறுதலன்றி, நுகர்தற்குரிய வழியின்னதென்பதையும்ஓளவைப் பிராட்டியார் சால இனிய தமிழ்ச் சொற்களிலேகாட்டி அருள் புரிந்திருக்கிறார். ஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்திஒருவனிடத்திலும் மனத்தாலும், வாக்காலும் செய்கையாலும்,கற்புநெறிதவறாமல் நித்தியப் பற்றுதலுடையோரால் மனஒருமையெய்தித் தம்முள் ஆதரவுற்றுத் துய்க்கும் இன்பமேஇன்பமெனத் தகும் என்று ஓளவையார் கூறுகிறார். இனி, முக்தியாவது யாதெனில்:- கடவுளைஉள்ளத்திலிருத்தித் தானென்ற கொள்கையை மாற்றிஈசபோதத்தையெய்தி, மேற்கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும்எவ்விதமான ஸம்பந்தமுமில்லாமலே செய்கையற்று மடிந்துகிடப்பா னென்றெண்ணுதல் பெருந் தவறு. உயிருள்ள வரைஒருவன் தொழில் செய்யாதிருக்கக் கடவுளுடைய இயற்கைஇடங்கொடாது. 'யாவனாயினும் (மனத்தாலேனும், வாக்காலேனும்,உடம்பாலேனும்) யாதேனு மொருவிதமான செய்கை செய்துகொண்டிராமல் சும்மாயிருத்தல் ஒரு க்ஷணங்கூடஸாத்தியப்படாது. இயற்கையிலேயே பிறக்கும் குணங்களால்ஒவ்வொருவனும் தன் வசமின்றியே எப்போதும் தொழில்"செய்து கொண்டிருக்கும்படி வற்புறுத் தப்படுகிறான்' என்று கண்ணபிரான் பகவத் கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இன்னும் ஓளவைப் பிராட்டியின் நூல்களிலுள்ளவசனங்களை உதாரணங்காட்டி அவருடைய மகிமைகளையெல்லாம் விளக்கிக் கூறவேண்டுமாயின் அதற்கு எத்தனையோசுவடிகள் எழுதியாக வேண்டும். நமது வியாசமோ ஏற்கெனவேமிகவும் நெடிதாய்விட்டது. ஆதலால் இந்தக் கவியரசியைக்குறித்துத் தற்காலத்தினர் தெரிந்து கொள்ள வேண்டியஅம்சங்களில் மிகவும் முக்கியமாக எனக்குத் தோன்றுவனவற்றை மற்றொரு வியாஸத்தில் சுருக்கமாகச்சொல்ல உத்தேசம் கொண்டிருக்கிறேன தமிழ் நாட்டு மாதராகிய, என் அன்புக்கும்வணக்கத்துக்குமுரிய, சகோதரிகளே, இத்தனை பெருமைவாய்ந்த தமிழ் நாகரீகத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடையபயிற்சிகளையும் முயற்சிகளையும் பொறுத்திருக்கிறது.பூமண்டலத்தில் நிகரில்லாத அருஞ்செல்வமுடைய சேமநிதியொன்றுக்குக் கடவுள் உங்களைக் காவலாக நியமித்திருக்கிறான்.மனித உலகமோ இந்த நேரத்தில் பிரமாண்டமான சண்டமாருதங்களைப் போன்ற மாறுதல்களாலும், கிளர்ச்சிகளாலும்,புரட்சிகளாலும், கொந்தளிப்புற்ற கடலிடைப்பட்டதொரு சிறுதோணிபோல் அலைப்புண்டும், புறளுண்டும், மோதுண்டும், எற்றுண்டும், சுழற்றுண்டும், தத்தளிக்கிறது. இந்த மஹா பிரளயகாலத்தில் தமிழ் நாகரீகம் சிதறிப்போகாதிருக்கும்படி கடவுள்"அருள் புரிவாராகுக. அஃது அங்ஙனம் சிதறாமலிருக்குமாறுதகுந்த கல்விப் பெருமையாலும், ஒழுக்க மேன்மையாலும்விடுதலையின் சக்திகளாலும். அதைக் காப்பாற்றக் கூடியதிறமையை உங்களுக்கு பரப்ரம்மம் அருள் செய்க. |