பக்கம் எண் :

மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கதை

அப்பால் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின்குமாரியாகிய ஸ்ரீ தங்கம்மா பின்வரும் பத்திரிகையைப்படித்தனர்:-

சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னே சீனதேசத்தில் செகியாங் மாகாணத்தில் ஷாங் ஸிங் என்றபட்டணத்தில் ஒரு ராஜாங்க உத்தியோகஸ்தரின் மகளாக 'சியூ சீன்' என்ற நமது கதாநாயகி பிறந்தாள். இவளைக்குறித்துச் சென்ற வருஷம் ஆகஸ்டு மாசத்து 'ஏஷியாடிக்ரெவ்யூ' (ஆசிய பரிசோதனை) என்ற பத்திரிகையில்லயோநெல்கிப்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ளகதையில் ஸாராம்சமான சில பகுதிகளை இந்த சபையின்"முன்னே தெரிவிக்கிறேன்.

ஆசியாவில் பெண் விடுதலைக் கொடியைநாட்டவேண்டுமென்று பாடுபட்டவர்களில் இவளும்ஒருத்தியாகையால் இவளுடைய கதை பெண் விடுதலையில்நாட்டம் செலுத்தி வரும் உங்கள் அனைவர்க்கும் மிகவும்ரஸமாகத் தோன்றக் கூடும்.

''சியூ சீன்'' என்ற பெயரில் சீன் என்பதற்கு''ஒளியுடைய ரத்நம்'' என்பது பொருள். ''சியூ'' என்ற உபநாமம் ''கார் பருவம்'' (மழை பெய்யுங்காலம்) என்ற பொருள்உடையது. பின்னிட்டு இவள் சிங்ஹஸியாங் என்ற பட்டப்பெயர் தரித்துக்கொண்டாள்; அதன் பொருள் ''ஆண்மக்களுடன் போர் செய்பவள்'' என்பது இவளுக்கு ''சியெந்-ஹெூ நு-சி-யெஹ்'' என்றும் ஒரு பெயருண்டு.அதன் பொருள் யாதெனில் ''கண்ணாடி ஏரிக்கரைப் பெண்வக்கீல்'' என்பது. ''கண்ணாடி ஏரி'' அந்தப் பிரதேசத்தில் ஒருஏரிக்குப் பெயர்.

பதினெட்டாம் வயதில் இவள் ''லாங்'' என்ற"பெயருள்ள ஒருவனை மணம் செய்து கொண்டு அவனுடன்சீனத்து ராஜதானியாகிய பெசிங் நகரத்தில் சென்று வாழ்ந்தாள்.அங்கே இவளுக்கு ஒரு பெண் குழந்தையும் ஓராண்குழந்தையும் பிறந்தன. 1900 ஆம் வருஷத்தில் பாக்ஸர்கலக நிமித்தமாக பெகிங் நகரத்தில் அன்னிய ராஜ்யப்படைகள் புகுந்து சீனத்துக்குச் செய்த பழிகளைக் கண்டுமனம் பொறுக்காமல், இவள் 'ஐயோ, மனுஷ்ய ஜன்மத்தில்பிறந்தும் நம்முடைய மனுஷ்ய சக்தியைக் காண்பிக்கும்பொருட்டாகக் கஷ்டங்களையும் விபத்துக்களையும் எதிர்த்துஉடைக்கும் பாக்கியம் நமக்கில்லாமல் போய்விட்டதே!வீட்டுக் காரியங்களின் அற்பக் கவலைகளுக் கிரையாகிமடியவா நாம் பூமியில் பெண் பிறந்தோம்' என்று சொல்லிபெருமூச்செறிந்து வருத்தப்பட்டாள்.