பக்கம் எண் :

மாதர் - ரெயில்வே ஸ்தானம்

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணிநேரம் தாமஸமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிதுதூரம் உலாவி வரலாமென்று கருதித் தென்புறமாகக்கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலேமிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரைகள் தைத்த மஸ்லீன் சட்டை. சரிகைக்கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூர்ணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்தமீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகிவிட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக்கண்ணீர் ஊற்றுகிறது. இதைப் பார்த்து எனக்கு மிகவும்பரிதாப முண்டாயிற்று. நான் போய் அவனை ஏன்அழுகிறாய் என்று கேட்டால், அதினின்றும் அவனுக்குஒரு வேளை கோபம் உண்டாகுமோ என்பதைக்கூடயோசனை செய்யாமல் சரேலென்று அவன் முன்னேபோய் நின்றுகொண்டு:-  ''தம்பி, ஏன் அழுகிறாய்?''என்று கேட்டேன்.

அவன் என்னை ஏற இறங்க ஒருமுறைபார்த்தான். அவனுக்கு 25 வயதுக்குமேல் இராது. அவன் தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தபோதே மிகவும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான்.பிறகு அவன் என்னைப் பார்த்தவுடன் கண்ணைந்துடைத்துக்கொண்டு என் இரண்டு கண்களுடனேஅவனிரண்டு கண்களும் பொருந்த நோக்கிய காலத்திலஅவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத ரூபமாகவேதென்பட்டது.

என்னை உற்று நோக்கியதினின்றும் அவனுக்கு எப்படியோ என்னிடத்தில் நல்லெண்ணம்உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம்கொள்ளாமல் ''ரயில் எப்போது வரப்போகிறது?'' என்றுகேட்டான்.

''இன்றைக்கு ஒரு மணி நேரம் ரயில்தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்'' என்றேன்.

எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால் நான் அவனிடம்உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன். ?உங்களுக்கு உருது எப்படித் தெரியும்?  உங்களைப்பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே? என்றுகேட்டான்.

அதற்கு நான்:-  ''சிறு பிராயத்திலேயேநான் காசிப் பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று'' என்றேன்.

''காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?''  என்று அந்த முஸல்மான் கேட்டான்.