பக்கம் எண் :

மாதர் - முகமதிய ஸ்திரீகளின் நிலைமை

அது கேட்ட என் முஸ்லீம் நண்பர்:''கூடாது. ஏனென்றால் முகம்மது தான் கடைசி நபி.அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள்.அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை'' என்றார்.

''முந்திய நபிகளின் கட்டளைகளும்கடவுளுடைய நேரான கட்டளைகளேயன்றி அந்தந்தநபிகளின் சொந்தக் கருத்துக்களல்ல என்பதை இஸ்லாமானவர்கள் அங்கீகாரம் செய்கிறார்கள். காலத்தினமாறுதலுக்கிணங்க, அல்லா, தன் பழைய கட்டளைகளைமாற்றி ஒவ்வொரு புதிய நபி மூலமாகவும் புதிய கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்;எனவே, முகம்மது நபி இருந்த காலத்துக்கும் தேசத்துக்கும் பொருந்த அவர் மூலமாகப் புதியகட்டளைகள் கொடுக்கப்பட்டன மதக்கொள்கைகள் எக்காலத்துக்கும் எந்த தேசத்திற்கும் பொது. ஆதலால்அவற்றை மாற்றக்கூடாது. வெறுமே ஜனங்கட்கு சம்பந்தமான ஆசார விவகாரங்களை காலதேசங்களுக்குப்பொருந்தும்படி மாற்றலாமென்று முகம்மது நபி சொல்லவில்லையா?'' என்று அந்த ஹிந்து நண்பர் கேட்டார்.

அங்ஙனம் எங்கள் நபிநாயகம் அவர்கள்உத்தரவு கொடுக்கவில்லை'' என்று என் முஸ்லீம் நண்பர்தெரிவித்தார்.

''உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமோ? நீங்கள் கொரான் முழுதும் வாசித்திருக்கிறீர்களோ?'' என்றுநான் கேட்டேன்.

அதற்கு என் முஸ்லீம் நண்பர்:- ''நான் கொரான் முழுதும் ஓதியதில்லை. என் சுற்றத்தாரில் சிலர்கொரான் முற்றிலும் ஓதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப்பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிவிக்கிறேன்'' என்றார்.பிறகு இந்த விஷயத்தை விட்டுவிட்டோம்.

அப்பால் நான் என் முஸ்லீம் நண்பரை நோக்கி:-  ''தென் ஜில்லாக்களிலே தமிழ்ப் பேசும் முஸ்லீம்(ராவுத்தர்) களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! அதன் காரணம் யாது?'' என்று கேட்டேன்.''இங்கும் சிலர் அந்த வழக்கத்தைப் பரிபாலிக்கத்தான் செய்கிறார்'' என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.

''எனினும் பலர் அதைப் பரிபாலிக்கவில்லையே?அதன் முகாந்திரம் யாது?'' என்று கேட்டேன்.

''வேதசாஸ்திர விதிகளில் அவர் செலுத்தக்கடமைப்பட்ட அளவு பயபக்தி செலுத்தாமலிருப்பதே அதற்குமுகாந்திரம்'' என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.

''அப்படியிருந்தும், தென் ஜில்லாக்களிலுள்ளஇந்த முஸ்லீம்கள் மற்றப் பக்கத்து முஸ்லீம்களைக் காட்டிலும் அல்லாவின் பக்தியிலும் மதப்பற்றுதலிலும் சிறிதேனும் குறைந்தவர்களில்லை என்பது பிரத்யக்ஷ மன்றோ? அங்ஙனமாக, இவர்கள் கொரான் விதிகளில்போதிய அளவு பயபக்தி செலுத்தாமல் இருக்கிறார்கள்என்று சொல்லுதல் நியாயம் அன்று. இந்த கோஷா விஷயத்தில் மாத்திரம் இந்த தேச சம்பிரதாயங்களைத்தழுவி நடக்கிறார்கள். இவர்களுடைய கூட்டத்தில் எத்தனை ஞானிகளும் பக்திமான்களும் அவதாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த கோஷா விஷயத்தைஇக்கூட்டத்தின் மீது வற்புறுத்தாமல் தான் இருந்திருக்கிறார்கள். ஆதலால் மதபக்தி முதலிய விஷயங்களில் மாறுதல்கள் கூடாதேயொழிய, ஆசாரங்களில்காலத்துக்குத் தகுந்த இடத்துக்குத் தகுந்த மாறுதல்கள் செய்து கொள்ள இஸ்லாம் சாஸ்திரங்களே அனுமதி தரக்கூடும் என்று நினைக்கிறேன்'' என்று நான் சொன்னேன்.

இது கேட்டு அந்த முஸ்லீம் நண்பர் மீளவும்:-''நான் நன்றாகக் கொரான் ஓதியவர்களை விசாரித்து இந்தவிஷயத்தில் முடிவு சொல்லுகிறேன்'' என்றார். ''இடைக்காலத்து சாஸ்திரங்கள் இந்த விஷயத்தில் அதிகமுரண் செலுத்தக் கூடும். ஆதலால் சாட்சாத் கொரான் வேதத்தையே நன்றாகப் படித்து உணர்ந்தவர்களிடம்விசாரணை செய்யுங்கள்'' என்றேன்.

''சரி, அங்ஙனமே செய்கிறேன்'' என்று என்முஸ்லீம் நண்பர் சொன்னார்.

பிறகு துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளேபிரம்மாண்டமான விடுதலைக்கிளர்ச்சி நடந்து வருவதைப்பற்றியும் அங்கு பல மாதர்கள் கோஷா வழக்கத்தை முற்றிலும் ஒழித்துவிட்டு, கல்வி கேள்விகளில் உயர்ந்ததேர்ச்சியுடையோராய், தங்களுக்குள்ளே சபைகள் சேர்த்தும்தாங்களே உபந்நியாஸங்கள் முதலியன நடத்தியும், உலகத்துமற்ற மாதர்களைப்போல் துருக்கியிலுள்ள மாதரும் கல்வி,விடுதலை, ஆண்களுடன் சமத்துவம் இவற்றை எய்திமேன்படுமாறு அதிதீவிரமான முயற்சிகள் செய்து வருவதைப்பற்றியும் நான் சில வார்த்தைகள் சொன்னேன்.

அப்பால் எங்கள் காலைக் கூட்டம் கலைந்துவிட்டது. என் முஸ்லீம் நண்பரும் தம் வீட்டுக்குப் போயினர்.