பக்கம் எண் :

மாதர் - முகமதிய ஸ்திரீகளின் நிலைமை

இதிலிருந்து சம்பாஷணை பொதுவாகமுகமதிய விவகாரங்களின் விஷயத்தைக் குறித்துநடைபெறலாயிற்று. அப்பால் முகம்மதிய மாதர்களின்ஸ்தானத்தைக் குறித்துப் பேசலானோம்.

என்னுடனே ஒரு ஹிந்து நண்பர்இருந்தார். அவர் அந்த முஸ்லீம் நண்பரை நோக்கி:-''உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்துவைப்பதாகிய (கோஷா) வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?''  என்று கேட்டார்.

அது கேட்டு அந்த முகம்மதிய நண்பர்:-''முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலகிவஸல்லா) அவர்கள்காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப்போய்விட்டது.பிறகு முகம்மது நபி அதை மீளவும் விதியாக்கினார்''என்றார். அப்போது நான் ''மதவிஷயங்களை அதாவதுஅல்லாவிடம் செலுத்தவேண்டிய பக்தி முதலிய விஷயங்களைத் தவிர, விவாகம், ஸ்திரீகளை நடத்த வேண்டிய மாதிரி முதலிய ஜனசமூகத்தின் ஆசார நியமங்களில் காலத்துக்குத் தக்கபடி புதிய மாறுதல்கள் செய்து கொள்ளலாமன்றோ?'' என்று கேட்டேன்.

''அங்ஙனம் ஆசார விஷயங்களிலேகூடமாறுதல்கள் செய்ய எங்கள் சாஸ்திரங்கள் இடங்கொடுக்கவில்லை!'' என்று அந்த முஸ்லீம் நண்பர் சொன்னார்.''எந்த சாஸ்திரங்களுமே ஆசார நியமங்களில், அதாவதுநம்மால் விதிக்கப்பட்ட புதிய ஆசாரமுறையில் அதற்குப்பிறகு யாதொரு மாறுதலும் ஏற்படக்கூடாதென்று விதிப்பதுதான் வழக்கம். ஆனால் அதன்படி எங்கும்நடப்பதில்லை. எல்லா ஜாதிகளிலும் எல்லா ஜன சமூகங்களிலும் எல்லா தேசங்களிலும் எல்லா மதஸ்தர்களுக்குள்ளும் காலத்துக்குக் காலம் ஆசாரங்களில்புதிய மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் வருகின்றன''என்று நான் சொன்னேன்.

''புராதன நபிகளால் விதிக்கப்பட்ட ஆசாரங்களில் சில முகம்மதிய நபியின் காலத்தில் மாறவில்லையோ?  அது போல் முகம்மது நபியின் காலத்தில் ஏற்பட்ட ஆசாரங்களை அதன் பிறகு மாற்றக்கூடாதோ?'' என்று என் ஹிந்து நண்பர் கேட்டார்.