பக்கம் எண் :

மாதர் - இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை

ஸ்ரீீமான் மோஹனதாஸ் கரம்சந்திர காந்தி (மகாத்மா காந்தி)யால் நடத்தப்படும் ''நவஜீவன்''என்ற பத்தரிகையில் ஒருவர் பாரத தேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம்செய்திருக்கிறார்.

அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின் வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

 வயது     மணம்புரிந்த மாதர்     கைம்பெண்கள்
   0-1          "13,212              1,014
   1-2          17,753              856
   2-3          49,787             1,807
   3-4         1,34,105             9,273
   4-5         3,02,425            17,703
   5-10        22,19,778            94,240
   10-15      1,00,87,024           2,23,320

இந்தக் கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகு முன்னரே விதவைகளாய்விட்ட மாதர்களின்தொகை 1,014! 15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின்தொகை 3 1/2 லக்ஷம்! இவர்களில் சற்றுக் குறைய 18000பேர் ஐந்து வயதுக்குட்பட்டோர்!

இப்படிப்பட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டுஅவற்றின் இறுதியில் மேற்படிக் கடிதம் எழுதியவர். ''இக்கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாகஇருக்கிறது. இதைப் படிக்கும்போது எந்த மனிதனுடையமனமும் இளகிவிடும். (இந்நாட்டில்) விதவைகள் என்றபாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?'' என்று சொல்லிவருத்தப்படுகிறார்.

இந்த வியாசத்தின்மீது மகாத்மா காந்திபத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி ''மேலே காட்டிய தொகையைப் படிப்போர்அழுவார்கள் என்பது திண்ணம்'' என்கிறார். அப்பால்,இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும்உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறார். அவற்றின்சுருக்கம் யாதெனில், (1) பால்ய விவாகத்தை நிறுத்திவிடவேண்டுமென்பதும் (2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும்மற்ற இளமையுடைய கைம்பெண்களும் புனர் விவாகம்செய்துகொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமே யாகும்.

ஆனால் இந்த உபாயங்கள் விருப்பமுடையோர்அநுசரிக்கலாமென்றும், தமக்கு இவற்றை அநுசரிப்பதில்விருப்பமில்லையென்றும், தம்முடைய குடும்பத்திலேயேபலவிதவைகள் இருக்கலாமென்றும், அவர்கள் புனர்விவாகத்தைப்பற்றி யோசிக்கவே மாட்டார்களென்றும்,தாமும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ளும்படி கேட்கவிரும்பவில்லை என்றும் ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார்.