பக்கம் எண் :

மாதர் - ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம்

''ஆண்மக்கள் புனர் விவாகம் செய்துகொள்ளுவதில்லை என்ற விரதம் பூணுதலே விதவைகளின் தொகையைக் குறைக்கும் அருமருந்தாகும்'' என்று ஷ்றீமான் காந்தி அபிப்பிராயப்படுகிறார். இந்த விநோதமான உபாயத்தை முதல் முறைவாசித்துப் பார்த்தபோது எனக்கு ஸ்ரீமான் காந்தியின்உட்கருத்து இன்னதென்று விளங்கவில்லை. அப்பால்,இரண்டு நிமிஷம் யோசனை செய்து பார்த்த பிறகுதான்,அவர் கருத்து இன்னதென்பது தெளிவுபடலாயிற்று.அதாவது, ?முதல் தாரத்தை சாககொடுத்தவன் பெரும்பாலும்கிழவனாகவே யிருப்பான். அவன் மறுபடி ஒரு சிறுபெண்ணை மணம் புரியுமிடத்தே அவன் விரைவில் இறந்துபோய் அப்பெண் விதவையாக மிஞ்சி நிற்க இடமுண்டாகிறது. ஆதலால் ஒரு முறை மனைவியைஇழந்தோர் பிறகு மணம் செய்யாதிருப்பதே விதவைகளின்தொகையைக் குறைக்க வழியாகும்? என்பது ஸ்ரீமான்காந்தியின் தீர்மானம்.

சபாஷ்! இது மிகவும் நேர்த்தியான உபாயம்தான்.ஆனால் இதில் ஒரு பெரிய சங்கடம் இருக்கிறது. அதுயாதெனில், இந்த உபாயத்தின்படி ஆண்மக்கள் ஒருபோதும்நடக்கமாட்டார்கள். மேலும், பெரும்பாலும் கிழவர்களே முதல்தாரத்தை இழப்பதாக ஸ்ரீமான் காந்தி நினைப்பதும் தவறு.'இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சராசரி 25-ம் பிராயத்தில் மரணம் நேருகிறது' என்பதை ஸ்ரீமான்காந்தி மறந்துவிட்டார். எனவே, இளம்பிராயமுடைய பலரும்மனைவியாரை இழந்துவிடுகிறார்கள். அவர்கள் ஸ்ரீீமான் காந்தி சொல்லும் சந்நியாச மார்க்கத்தை ஒருபோதும் அநுஷ்டிக்கமாட்டார்கள். அவர் அங்ஙனம் அநுஷ்டிப்பதினின்றும் தேசத்துக்குப் பல துறைகளிலும் தீமை விளையுமேயன்றி நன்மை விளையாது. ஆதலால்அவர்கள் அங்ஙனம் துறவு பூணும்படி கேட்பது நியாயமில்லை.

ஸ்திரீ-விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி ''புருஷ-விதவை'' களின்(அதாவது: புனர் விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின்)தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார்! இதினின்றும்,இப்போது ஸ்திரீ-விதவைகளின் பெருந்தொகையைக் கண்டுதமக்கு அழுகை வருவதாக ஸ்ரீீமான் காந்தி சொல்லுவதுபோல், அப்பால் புருஷ விதவைகளின் பெருந்தொகையைக்கண்டு அழுவதற்கு ஹேது உண்டாகும்.