பக்கம் எண் :

கலைகள் - இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)

இன்று தேவர்களை அழைக்கிறோம்.

இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தை காட்டும் பொருட்டாக.

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை யழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக.

கல்வி, அறிவு, தூய்மை, பெருமை, இன்பம், செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒளிகளெல்லாம் வெற்றியடையும் பொருட்டாக.

இன்று தேவர்களை அழைக்கிறோம். எம்மை ரிஷிகளாகச் செய்து தரும்பொருட்டு. எமது குற்றங்களை யெல்லாம் நீக்கிக் கோணல்களை நிமிர்த்தி, எமக்கு அமர இன்பத்தைத் தரும் பொருட்டு.

எமதறிவையே தேனாக்கிக் கொடுக்கிறோம். இந்தத் தேனை தேவர்கள் உண்டு களிபெறுக. எமது மந்திரங்கள் தேவருடைய திருவடியைப் பற்றுக. அவர்களை இந்த வேள்வியிலே கொண்டு தருக. எமதுடலையும், உயிரையும், அறிவையும் அவர்களுக்குக் கோயிலாக்குகிறோம். எமதுடைமைகள் எல்லாம் அவர்களைச் சார்ந்தன; எமது மனைவி மக்கள் அவர்களுக்குச் சேவகர்; எமதுவீடு, வாசல், மாடு, கழனியெல்லாம் அவர்களுக்குரியன. எமது தொழில் அவர்களுடையது. எமது நினைப்புக்களெல்லாம், ஆசைகளெல்லாம், விருப்பங்கள் எல்லாம், இன்பங்கள் எல்லாம் தேவர் முன்பு வைக்கிறோம்; அவை அவரின் உணவாகுக.

வானவரே, வந்து சுவை கொள்ளுவீர்.

அன்பே வா, மித்ரா; உன்னைப் பணிகின்றோம். உன்னாலே காக்கப்பட்டவன் அழிவதில்லை. தோல்வி பெறுவதில்லை. இவனை இங்கிருந்தேனும், தொலையில் இருந்தேனும் தீங்கு வந்து தீண்டுவதில்லை என்று எமது முன்னோர் கண்டனர். நாமும் அங்ஙனமே காண்கிறோம்.