பக்கம் எண் :

தத்துவம் - வல்லூறு நாயக்கர்

இப்படி இருக்கையில், என் முன்னே வேதபுரம் கிருஷ்ணகான சபையாரின் காரியதரிசியாகிய வல்லூறு நாய்க்கர் வந்து நின்றார். உட்காரும்படி சொன்னேன். உட்கார்ந்தார். 'விஷயமென்ன?'  என்று கேட்டேன். அவர் சொல்லுகிறார்:  "அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு நமது சபையின் ஆதரவின்கீழ் நடைபெறும் ராமாயண உபந்நியாசக் கோவையில் இரண்டாவது பகுதியாகிய சீதா கல்யாணம் நடக்கிறது. முதல் கதையாகிய ஸ்ரீராமஜனனம் சென்ற புதன்கிழமை நடந்தது. தஞ்சாவூரிலிருந்து மிகவும் நன்றாகப் பாடக்கூடிய பின்பாட்டுக்காரர் வந்திருக்கிறார். இவருக்குச் சன்னமான சாரீரம்; ஆனால் பெண் குரல் அன்று. நன்றாகப் பாடுவார். ஒருதரம் வந்து "கேட்டால் உங்களுக்கே தெரியும். மேலும் இந்த ராமாயணக் கதையில் வசூலாகும் பணத்தில் ஒரு சிறு பகுதி நமது அரசாங்கத்தாரின் சண்டைச் செலவிற்கு உதவி செய்வதாக அதிகாரிகளிடம் வாக்குக் கொடுத்திருக்கிறோம். நான்கு ரஸிகர் வந்து கேட்டால்தானே பாகவதற்குச் சந்தோஷம் ஏற்படும். ரஸிகராக இருப்பவர் வந்து கேட்டால் மற்ற ஜனங்களும் வருவார்கள். நம் சபைக்கு லாபம் உண்டு. பாகவதர் ராமாயணப் பிரசங்கத்தில் தேர்ச்சியுடையவர். மிருதங்கம் அடிக்கிற பிராமணப் பிள்ளை பதினைந்து வயதுடையவன்; ஆனால் மிகவும் நன்றாக அடிக்கிறான். தாங்கள் அவசியம் வரவேண்டும்" என்றார்.

அதற்கு நான், ''சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், லக்ஷ்மண சக்தி, பட்டாபிஷேகம் என்கிற நான்கு கதைக்கும் நான் வரலாமென்று உத்தேசிக்கிறேன்; நிச்சயமாக வருகிறேன். எனக்கு இரவில் தூக்கம் விழிப்பது கொஞ்சம் சிரமம், ஆயினும் தங்கள் பொருட்டாகவும், தங்கள் சபையின் தலைவராகிய ஓங்காரச் செட்டியார் பொருட்டாகவும், அந்தச் சிரமத்தைப் பார்க்காமல் வருவேன்'' என்றேன். "இராமாயணப் பிரசங்கத்தில் வரும் தொகையிலே ராஜாங்கத்தாரின் சண்டைச் செலவிற்காக உதவி செய்யப்படும் என்ற விஷயத்தைத் தனியாகக் காட்டி ஒரு விசேஷ விளம்பரம் போடப் போகிறோம்; அதில் என்ன மாதிரி வக்கணை எழுத வேண்டும் என்பதைத் தாங்கள் தெரிவிக்க வேண்டும்" என்று வல்லூறு நாயக்கர் பிரார்த்தித்துக் கொண்டார். நான் வக்கணை சொன்னேன். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் குள்ளச்சாமி வந்து சேர்ந்தார்.