பக்கம் எண் :

தத்துவம் - ஜீவன் முக்தி: அதுவே சிதம்பரம்

குள்ளச்சாமி யாரென்பதை நான் முன்னொரு முறை சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய "வண்ணான் கதை"யில் சொல்லியிருக்கிறேன். இவர் ஒரு பரமஹம்ஸர். ஜடபரதரைப் போல், யாதொரு தொழிலும் இல்லாமல் முழங்காலுக்குமேல் அழுக்குத் துணி கட்டிக் கொண்டு போட்ட இடத்தில் சோறு தின்றுகொண்டு, வெயில் மழை பாராமல் தெருவிலே சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருடைய ஒழுக்க விநோதங்களை மேற்படி பாரதி அறுபத்தாறு 30, 31, பாடல்களையும் காண்க. வண்ணான் கதையிலே காண்க. இவர் வந்து "சோறு போடு என்று கேட்டார். தாம் திருவமுது செய்யுமுன்பாக, ஒரு பிடி அன்னம் என்கையில் நைவேத்தியமாகக் கொடுத்தார். நான் அதை வாங்கியுண்டேன். அப்பொழுது சாமியார் போஜனம் முடித்த பிறகு, என்னுடன் மேல் மெத்தைக்கு வந்தார். ''கண்ணை மூடிக்கொள்'' என்றார். கண்ணை மூடிக்கொண்டேன். நெற்றியில் விபூதியிட்டார், ''விழித்துப் பார்'' என்றார். கண்ணை விழித்தேன். நேர்த்தியான தென்றல் காற்று வீசுகிறது. சூரியனுடைய ஒளி தேனைப் போல மாடமெங்கும் பாய்கின்றது. பலகணி வழியாக இரண்டு சிட்டுக்குருவிகள் வந்து கண்முன்னே பறந்து விளையாடுகின்றன. குள்ளச்சாமியார் சிரிக்கிறார். கடைக்கண்ணால் தளத்தைக் காட்டினார். கீழே குனிந்து பார்த்தேன். ஒரு சிறிய ஒலைத்துண்டு கிடந்தது. அதை நான் எடுக்கப் போனேன். அதற்குள்ளே அந்தக் குள்ளச்சாமி சிரித்துக் கொண்டு வெளியே ஓடிப்போனார். அவரைத் திரும்பவும் கூப்பிட்டால் பயனில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் இஷ்டமானபோது வருவார்; இஷ்டமானபோது ஓடிப்போவார். சிறு குழந்தை போன்றவர். மனுஷ்ய விதிகளுக்குக் கட்டுப்பட்டவரில்லை. ஆகவே, நான் அவரைக் கூப்பிடாமலே கீழே கிடந்த ஓலையை எடுத்து வாசித்துப் பார்த்தேன்.

1. "எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல் போக விஷயங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக் கதிரை விழித்து நோக்குதலே, விடுதலை. அதுதான் சிதம்பரம். மகனே! சிதம்பரத்துக்குப் போ. 2. சிதம்பரத்தில் நடராஜருடன் சிவகாம சக்தி பக்தருக்கு வரதானம் கொடுக்கிறார். போய் வரம் வாங்கு. 3. சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களும் ஜீவன் முக்திச்சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும் நீண்ட வயதும் ஜீவன்முக்தியும்விளைக" என்று எழுதியிருந்தது. இந்த வசனங்கள் நமது புராதன வேத தர்மத்திற்கு ஒத்திருக்கிறபடியால், அவற்றைச் சுதேசமித்திரன் பத்திரிகை மூலமாக வெளியிடலானேன்.

குறிப்பு:-  "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ? இந்த ஜன்மத்தை வீணாகக்கழிப்பேனோ?"  என்று நந்தன் சரித்திரத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடியிருப்பதற்கும் இதுவே பொருள் என்று உணர்க.