ஆரோக்கிய ஸம்பந்தமான மந்திரங்கள நான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக்கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாகவமுடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களை யெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான்சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்றி நோயுறல் யாங்ஙன மியலும்? ஆஹா! வலிமையும், நோயின்மையும், ஆற்றலுமிருப்பதால் எனக்கு விளையுமின்பத்தை என்னென்றுரைப்பேன்? தேவத்தன்மையால் நான் எய்தும் ஆனந்தத்தை ஏதென்று சொல்வேன்? நான் தேவன்; நான் தேவன்; நான் தேவன். என் தலை, என் விழிகள், எனது நாசி, என் வாய், என் செவிகள், என் கழுத்து, மார்பு, வயிறு, கைகள், இடை, காலகள் - இவை யெல்லாம் முற்றிலும் ஆரோக்கியமுடையன; நோயுற்றன நோயுறத்தகாதன; எக்காலும் நோயுற மாட்டா. என் மனம் ஆரோக்கியமே வடிவுகொண்டது. என் மனமும், ஹ்ருதயமும் எவ்வித நோய்ப் பூச்சிகளாலும் தாக்கப்படாதன. நோய்களையும் அசுத்தங்களையும் நான் அறவே எறிந்துவிட்டேன். அவை மீண்டு வராதபடி அவற்றை சூன்யத்திற்குள்ளே வீழ்த்தி விட்டேன். நானே ஆரோக்கியம்; நான் தேவன். |