பக்கம் எண் :

கலைகள் -  தியானங்களும் மந்திரங்களும்  [விடுதலைக்கு வழி]

அமரத் தன்மையைக் குறித்த மந்திரங்கள்

நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள்ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தேர்ந்து கொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்.

நான் கடவுள், ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்துகொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் விழும்படி எப்போதும் "திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நான் எப்போதும் வீர்யமுடையேன்: ஜாக்கிரதையுடையேன்; எப்போதும் தொழில் செய்வேன்; எப்போதும் காதல் செய்வேன்; அதனால் சாதல் இல்லேன்.

நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடக்குமாறென்னே?நான் தேவனாதலால். நான் தீராத இளமை சார்ந்தேன். என்றும், எப்போதும். நித்யமான கால முழுமையிலும், தீராத, மாறாத இளமையுடையேன். மூடமனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர். நான் அதனை வேண்டேள். ஏனென்றால், இவர்களெய்தும் நீண்ட வயது துன்பமாகிறதேயன்றி வேறில்லை. நான் ஸதாகாலம் துன்பமின்றிவாழும் வாழ்க்கையை விரும்புகி்றேன். அதனை நான் எய்தி விட்டேன். தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்?  நான் கவலையை ஒழித்தேன், ஆதலால் எப்போதும் வாழ்வேன். எப்போதும் வாழ்வேன். ஆதலால் கவலையை விட்டேன். கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது. கவலையும் பயமும் பகைவர். நான் இப் பகைவரை வென்று தீர்த்தேன். ஆதலால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.