தெய்வமே, எனக்கு இவ்விதமான வாழ்க்கை தரலாகாதா? குருவிக்கில்லாதபெருமைகள் எனக்கும் சில அருள் செய்திருக்கிறாய் என்பது மெய்தான். ஆராய்ச்சி, பக்தி, சங்கீதம், கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும்; குருவிக்கு இயல்பில்லை. ஆனாலும், இந்த இரண்டுவித இயல்பும் கலந்து பெற்றால் நான் பரிபூரண இன்பத்தை அடையமாட்டேனா? இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? ''விடு'' ''விடு'' ''விடு'' என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பதுபோலிருக்கிறது. விடு, விடு, விடு - தொழிலை விடாதே. உணவை விடாதே. பேட்டை விடாதே. கூட்டை விடாதே. குஞ்சை விடாதே. உள்ளக்கட்டை அவிழ்த்துவிடு. வீண் யோசனையை விடு. துன்பத்தை விடு. இந்த வழி சொல்லுவதற்கு எளிதாயிருக்கிறது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னும் இவை வழக்கப்படுத்துதல் அருமையிலும் அருமை. 'விடு' என்ற பகுதியிலிருந்து "வீடு" என்ற சொல் வந்தது.வீடு என்பது விடுதலை. இதை வடமொழியில் முக்தி என்கிறார்கள். இந்த நிலைமையை இறந்துபோனதன் பின்பு பெறவேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையிலேயே, இப்போதே, அந்நிலையை விரும்புதல் நன்று. விடுதலையே இன்பத்திற்கு வழி; விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கிப் பெருமை காண்பார்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள். வா; நெஞ்சே, பராசக்தியை நோக்கிச் சில மந்திரங்கள் சாதிப்போம். நான் விடுதலை பெறுவேன்; எனது கட்டுக்கள் அறுபடும். நான் விடுதலை பெறுவேன்; என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன். என்னிச்சையிலே பிறருக்குத் தீங்கு விளையாது. எனக்கும் துன்பம் விளையாது. நன்மைகளே என்னுடைய இச்சைகள். இவற்றை நான் எப்போதும் நிறைவேற்றும்படியாக க்ஷணந்தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக. உயிர் வேண்டுகிறேன். தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர். உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்துகாக்கின்ற உயிர். அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும், அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு; எங்கும் எப்போதும், அச்சமில்லாத வலிய அறிவு. பிறவுயிருக்குத் தீங்கு தேடமாட்டேன்; என்னுடைய உயிருக்கு எங்கும் தீங்கு வரமாட்டாது. பராசக்தி, நின்னருளால் நான் விடுதலை பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன். |