பக்கம் எண் :

கலைகள் - சந்திரத் தீவு

தென் கடலில் மலேயத்தீவுகளினிடையே ''பூலோ பூலாங்'' என்ற ஒரு சிறிய தீவிருக்கிறது ''பூலோ பூலாங்'' என்ற மலேய பதத்துக்குச் சந்திரோதயத் தீவு என்று அர்த்தம். சுமார் "எழுபதினாயிரம் வருடங்களுக்கு முன்னே இத் தீவு 'சந்த்ர த்வீபம்' என்ற பெயருடன் விளங்கிற்று. அக்காலத்தில் அங்கு கங்காபுத்ரன் என்ற ஹிந்து ராஜா ராஜ்யம் செலுத்திக் கொண்டு வந்தான்.

அவனுக்கு ஆண் மகவு கிடையாது. பலவிதமான தவங்களும் வேள்விகளும் புரிந்தபின் ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குச் சந்திரிகை என்ற பெயரிட்டு வளர்த்தான்.

அந்தப் பெண்ணுடைய அழகும், கல்வியும் வர்ணிப்பதற்கு அரியன; கப்பல் வியாபாரிகளின் மூலமாக அப்பெண்ணினுடைய கீர்த்தி பூமண்டல முழுவதிலும் பரவி விட்டது.

அப்போது காசி நகரத்தில் அரசு செலுத்தின வித்யாபுத்ரன் என்ற பிராம்மண ராஜன், அந்தப் பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்பி, சண்டிகை என்ற தன் பெரிய தாயையும் ஸுதாமன் என்ற தன் மந்திரியையும் சந்திரத் தீவுக்கு அனுப்பினான்.

 அவ்விருவரும் பல ஸம்மானப் பொருள்களுடனும், பரிவாரங்களுடனும் சந்திரத் தீவிலே போயிறங்கி கங்காபுத்ரனைக் கண்டு வரிசைகளை யெல்லாம் கொடுத்துக் காசிராஜன் கருத்தை அறிவித்தார்கள்.

சந்திரிகைக்கு வயது பதினேழு. நடுப்பகலில் அவள் ஓரிடத்துக்கு வந்தால் அங்கு பகலொளி மங்கி நிலவொளி வீசும அவள் முகம் முழுமதி போன்றிருந்தது. அவள் நெற்றி பிறை போன்றது. அவள்விழிகள் நிலவு கொப்புளித்தன. அவள் புன்னகை நிலவு வீசிற்று. அவள்மேனியும் நிலவையே தெறித்தது.