பக்கம் எண் :

கலைகள் - சந்திரத் தீவு

இத்தகைய அழகுடைய பெண் பூமண்டலத்தில் எங்கும் கிடையாதபடியால், அவளைத் தகுதியற்ற வரனுக்குக் கொடுக்கக் கூடாதென்று கங்காபுத்ரன், வந்த வரன்களை யெல்லாம் விலக்கி, "மிகப் பொறுமையுடன் காத்திருந்தான்.

காசிராஜன் படத்தைப் பார்த்தவுடனே, அவனைத் தன்மகள் மணம் புரியலா மென்ற எண்ணம் கங்காபுத்ரனுக்குண்டாயிற்று. அவன் ராணியும் இணங்கினாள். ஆனால் அந்தப் பெண்ணுக்கு ஸம்மதமில்லை. பெண் சந்திரிகை காசியிலிருந்து வந்த மந்திரிஸுதாமனுடைய அழகையும், அவன் சொல் - நயத்தையும், நடை மேன்மையையும் கண்டு மயங்கியவளாய் அவனையே மணம்புரிந்து கொள்வேனென்று ஒரே ஸாதனையாக ஸாதித்தாள்; அதாவது முரண்டு பண்ணினாள்.

மறு நாள் கங்காபுத்திரன் தனது மந்திரியாகிய ராஜ கோவிந்தனையும் காசி தேசத்து மந்திரியான ஸுதாமனையும் பல வேடர் பரிவாரங்களையுஞ் சேர்த்துக் கொண்டு யானை "வேட்டைக்குச் சென்றான். வேட்டையில் இரண்டு ஆண் யானைகள் பட்டன. அப்பால் வனத்திலேயே ஸ்நான போஜனங்கள் முடித்துக்கொண்டு சிரம பரிஹாரத்தின் பொருட்டாகஆங்கோர் ஆலமர நிழலிலே, கங்காபுத்ரன், ராஜகோவிந்தன், ஸுதாமன் மூவருமிருந்து பலவிதமான சாஸ்திர ஸம்பாஷணைகள் செய்யலாயினர் - 

அந்த ஸம்பாஷணையிடையே சந்திரத் தீவின் ராஜா கேட்கின்றான்:- 'இன்று காலையில் இரண்டு யானைகளைக் கொன்றோமே? அது பெரிய பாவமன்றோ? ஆஹா! என்ன நேர்த்தியான மிருகங்கள்! ஆஹா! எத்தனை அழகு, எத்தனை ஆண்மை, எத்தனை வீரம், எத்தனை பெருந்தன்மை. அவற்றைக் கொன்றோமே, இது கொடிய பாவமன்றோ?' என்றான்.

அதற்குக் காசி மந்திரி ஸுதாமன் சொல்லுகிறான்:- 'ஆர்ய புத்ரா, யானையைக் கொல்வது மாத்திரந்தானா பாவம்? ஆடு, மாடு, கோழிகளைத் தின்கிறோம். அது பாவமில்லையா?' என்றான்.

சந்திரத் தீவின் அரசன் 'அதுவும் பாவந்தான்' என்றான்.