அதற்கு நான்:- "கேளீர், ராகவ சாஸ்திரியாரே! சட்டத்திற்கு விரோத மில்லாமல் நீர் சுதேசியம் பேசுவதிலும், மற்றபடி ஸமத்வம், விடுதலை முதலிய தர்மங்களை நீர் ஹிந்துக்களுக்குப் புகட்டுவதிலும் எனக்கு யாதொரு ஆக்ஷேபம் கிடையாது. ஆனால் நான் இப்போது "கைக்கொண்டிருக்கும் தர்மத்தை உம்மிடம் சொல்லிவிடுகிறேன்.ஸம்மதமுண்டானால் அதை இந்தியாவில் மாத்திரமன்று, பூமண்டல முழுதும் சென்று முரசு அடிக்கக் கடவீர். அந்த தர்மம் யாதெனில்:- மானிடரே, நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை. தெய்வத்தின் இஷ்டப்படி உலகம்நடக்கிறது. 'தெய்வமே சரண்' என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது நிச்சயமாகப் பயன்பெறும். மனிதன் தன் உள்ளத்தைத் தெய்வத்துக்குப் பலியாகக் கொடுத்து விடவேண்டும். அதுவே யாகம். அந்த யாகத்தை நடத்துவோருக்குத் தெய்வம், வலிமை, விடுதலை, செல்வம், ஆயுள், புகழ் முதலிய எல்லாவிதமான மேன்மைகளும் கொடுக்கும். இந்தக் கொள்கை நமது பகவத் கீதையில் சொல்லப்படுகிறது. இதனை அறிந்தால், பயமில்லை.ஹிந்துக்களுக்குத்தான் இவ்விதமான தெய்வ பக்தி சுலபம். ஆதலால் ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் ஆதலால் "ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தைப் பயமில்லாமல் செய்து மேன்மை பெற்றுமற்ற தேசத்தாரையும் கை தூக்கிவிட்டாலொழிய இந்தப் பூமண்டலத்துக்கு நன்மை ஏற்படாது. உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு வசப்பட்டு சகல தேசங்களிலும் நரக துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அஹங்காரத்தை வெட்டி எறிந்து விட்டால் மனித ஜாதி அமரநிலையடையும். தன்னை மற, தெய்வத்தை நம்பு.உண்மை பேசு. நியாயத்தை எப்போதும் செய். எல்லா இன்பங்களையும் பெறுவாய். இப்போது பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றப் போகின்றன. அந்தப் புதிய யுகம் தெய்வ பக்தியையே மூலாதாரமாகக் கொண்டு நடைபெறப் போகிறது.ஆதலால் அதில் ஹிந்துக்கள் தலைமை பெறுவார்கள். இது ஸத்தியம். இதை எட்டுத் திசைகளிலும் முரசு கொண்டடியும். இதுவே யான் சொல்லக்கூடிய விஷயம்"என்றேன். பிறகு, நான் சில வார்த்தைகள் பேசிய பிறகு ராகவ சாஸ்திரி விடை பெற்றுக்கொண்டு போகுந் தருணத்தில் ராமராயர் அவரை நோக்கி:- "முதலாவது, இந்த உடுப்பை மாற்றி ஹிந்துக்களைப் போலே உடுப்புப் போட்டுக்கொள்ளும். அதுவே ஆரம்பத்திருத்தம். கல்கத்தாவில் 'அமுர்த பஜார், பத்திரிகையின் ஆசிரியராகிய ஸ்ரீமான் மோதிலால் கோஷ் அங்கே கவர்னராக இருந்த லார்ட் கார்மைக்கேல் என்பவரைப் பார்க்கப் போயிருந்தாராம். உஷ்ண காலத்தில் சீமைஉடுப்பைப் போட்டுக் கொண்டு லார்ட் கார்மைக்கேல் வியர்த்துக் கொட்டுகிற ஸ்திதியில் இருந்தாராம் அப்போது மோதிலால் கோஷ் கவர்னரை நோக்கி, 'இந்தியாவில் இருக்கும்வரை எங்களைப் போலே உடுப்புப் போட்டுக்கொண்டால், இத்தனை கஷ்டம் இராது' என்று சொன்னாராம். அதற்கு லார்ட் கார்மைகேல் 'நீர் சொல்லுவது சரிதான். எங்களுடைய மூடத்தனத்தாலே அவ்வாறு செய்யாமலிருக்கிறோம்' என்று மறுமொழி சொன்னாராம். அப்படி யிருக்க நம்மவர் நம்தேசத்தில் சீமையுடுப்பு மாட்டுவது எவ்வளவுமூடத்தனம், பார்த்தீரா?" என்று சொன்னார். "இனிமேல் சுதேசி உடுப்புப் போட்டுக் கொள்கிறேன்" என்று ராகவ சாஸ்திரி ஸமஸ்கிருத பாஷையில் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். |