"இங்கு எதற்காக வந்தீர்?"என்று கேட்டேன். அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார். "எனக்கு விவாஹம் ஆகவில்லை. வேறு பந்துக்களும் இல்லை யாதலால் எவ்விதமான குடும்ப பாரமும் கிடையாது. போஜனத்திற்கு பூர்வீக சொத்திருக்கிறது.ஆதலால், என் காலத்தை தேசத்துக்காக உழைப்பதிலே செலவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிருக்கிறது. தேசத்துக்கு எவ்விதமான கைங்கர்யம் பண்ணலாம் என்பதைத் தங்களிடம் கேட்டுக்கொண்டு போகலாம் என்ற நோக்கத்துடன் இந்த ஊருக்கு வந்தேன்" என்று சொன்னார். "எனக்குத் தெரியாது. நீர் உலகத்துக்கு என்ன விதத்திலே உபகாரம் பண்ண முடியுமென்பது உம்முடைய காலதேச வர்த்தமானங்களையும் உம்முடைய திறமையையும் பொறுத்த விஷயம்" என்றேன். "ஜாதி பேதம் கூடாது. அதற்கு நமது பூர்வ சாஸ்திரங்களில் ஆதாரமில்லை. ஆணும் பெண்ணும் ஸமானம். யாரும் யாரையும் அடிமையாக நடத்தக்கூடாது. இன்று நாம்பிறரை அடிமையாக நடத்தினால் நாளை நம்மையேனும் நம்முடைய மக்களையேனும் பிறர் அடிமையாக நடத்துவார்கள். ஹிந்துக்கள் சட்டத்தை உடைக்காமல், இரவிலும், பகலிலும், "விழிப்பிலும், தூக்கத்திலும், கனவிலும் எப்போதும், ஸ்வராஜ்யத்துக்குப் பாடுபடவேண்டும். விடுதலை யில்லாதவர்கள் எப்போதும் துன்பப்படுவார்கள். இது போன்ற விஷயங்களை ஊரூராகப் போய் உபந்யாஸம் செய்தாலென்ன? தாங்கள் உத்திரவு கொடுத்தால் நான் இந்தக் காரியம் செய்யக் காத்திருக்கிறேன்" என்று ராகவ சாஸ்திரி சொன்னார். இப்படி இவர் பேசிக்கொண்டிருக்கும் போது, நம்முடைய சிநேகிதர் வேதாந்த சிரோமணி ராமராயர் வந்து சேர்ந்தார். அவரிடம் இந்த மலையாளியின் பூர்வோத்தரங்களையும் இவர் என்னிடம் கேட்கும் கேள்வியையும் சொன்னேன். ராமராயர் ஸந்தேஹமே அவதாரம். இவர் இந்த மலையாளியின் உடுப்பையும், இவர் கேள்வியையும் பார்த்து ஏதோ மனதில் ஐயங்கொண்டு பின் வருமாறு சொல்லத் தொடங்கினார்:- "ஓய் மலையாளி, `காளிதாஸர்' இஹலோக தந்திரங்களில் புத்தி செலுத்துவது கிடையாது. 'சக்தி, சக்தி' என்று ஒருவன் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தால், அவன்எல்லா விதமான பந்தங்களினின்றும் விடுபட்டு ஜீவன் முக்தியடைவான் என்ற தர்மத்தையே அவர் இடைவிடாமல் சொல்லிக் கொண்டு வருகிறார். இந்த தர்மம் ஹிந்துக்களுக்கு மாத்திரமன்று. அமெரிக்கா தேசத்தார் எல்லாருக்கும் நல்லது சக்தி உபாஸனையினாலே காளிதாஸன் மஹாகவியானான். சக்தி உபாஸனையாலே விக்ரமாதித்யன் மாறாத புகழ் பெற்றான். இதைத் தான் இவர் சொல்லுவார். சுதேசிய விஷயமாக எப்படி உழைக்கலாம் என்பதை நீர் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சென்னைப் பட்டணத்திலும் வடநாட்டு நகரங்களிலும் புகழ்பெற்றஜனத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவரிடத்திலே போய் கேட்டுத் தெரிந்து கொள்ளும்" என்று ராமராயர் சொன்னார். இங்ஙனம் ராமராயர் சொல்லியதில் அந்த ராகவ சாஸ்திரி திருப்தி அடையாமல், மறுபடி என்னை நோக்கி "எனக்கு என்ன உத்திரவு செய்கிறீர்கள்?" என்று கேட்டார். |