அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- "நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்கவேண்டும் என்று குப்புசாஸ்திரி தாமாகவே ஊகித்துக்கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்" என்றார். இவர் இங்கிலீஷ்காரரைப் போல் உடுப்புப் போட்டிருந்தாலும் இவருக்கு இங்கிலீஷ் பாஷை தடதடவென்று " பேசவரவில்லை. எனக்கோ ஸம்ஸ்கிருதம் பேசத் தெரியாது.பிறர் பேசினால் அர்த்தமாகும். ஆகவே, 'நான் இங்கிலீஷில் கேட்பது, அவர் ஸம்ஸ்கிருதத்தில் மறுமொழி சொல்வது' என்பதாக உடன்பாடு செய்துகொண்டோம். நெடுநேரம் சம்பாஷணை நடந்தது. அவருடைய பூர்வோத்தரங்களை யெல்லாம் விசாரணை செய்தேன். அவர் என்னிடம் சொல்லிய கதையை இங்கே சுருக்கமாகச் சொல்லுகிறேன். ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- "நான் பிறந்தது கள்ளிக்கோட்டை என்று சொல்லப்படும் கோழிக்கூட்டுக்கு சமீபத்தில் இரண்டு காத தூரத்தில் உள்ள ஒரு கிராமம்.. என்னுடைய தாயார் நான் "பிறந்து நாலைந்து மாதத்திற்குள் இறந்து போய்விட்டாள். தகப்பனார் என்னை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தார். நாலைந்து வகுப்பு வரை படித்தேன். எனக்கு இங்கிலீஷ் படிப்பு சரியாக வரவில்லை. அப்போதே எனக்கு மலையாள பாஷையிலே தேர்ச்சி உண்டாயிற்று. பதினைந்து வயதாக இருக்கையில் எனக்கு மலையாளத்தில் சுலோகம் எழுதத் தெரியும். பதினெட்டு வயது வரையில். சும்மா சுற்றிக்கொண்டிருந்தேன். பிறகு தகப்பனாரிடம் சொல்லாமல் காசிக்குப் புறப்பட்டுப் போய்விட்டேன. காசியில் பண்டிதர்கள் "நான் பிராமணன் இல்லை" என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சம்மதப்படவில்லை. அங்கே ஆர்ய ஸமாஜத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு நண்பர்ஆனார்கள். ஆர்ய ஸமாஜத்தார் ஜாதி பேதம் பார்ப்பது கிடையாது. அவர்களுக்குள்ளே உயர்ந்த ஸம்ஸ்கிருத வித்வான்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் ஐந்தாறு வருஷம் ஸம்ஸ்கிருதம் படித்தேன். பிறகு பஞ்சாப் நாட்டிற்குப்போய் லாஹூர் பட்டணத்தில் ஆர்ய ஸமாஜ உபதேசியாய்ச் சில வருஷங்கள் கழித்தேன். அங்கிருந்து கல்கத்தாவுக்கு வந்தேன். கல்கத்தா ஸர்வகலா சங்கத்தார் முன்புபரீக்ஷை தேறி, "வியாகரண தீர்த்தன்" என்ற பட்டம் பெற்றேன். இதற்கிடையே மலையாளத்திலிருந்து எனது பிதா இறந்து போய்விட்டார் என்ற செய்தி கிடைத்தது. கொஞ்சம் பூர்வீக சொத்து உண்டு. அதைப் பிறர் கைக்கொள்ளாதபடி பார்க்கும் பொருட்டு, மலையாளத்துக்கு வந்தேன். இப்போது சில வருஷங்களாக கோழிக்கூட்டிலே தான் வாஸம் செய்து வருகிறேன். எனக்கு சாஸ்திரிப் பட்டம் பஞ்சாபிலே கிடைத்தது"என்றார். |