பக்கம் எண் :

கலைகள் -  ராகவ சாஸ்திரியின் கதை்

வேதபுரத்தில் தெலுங்குப் பிராமணர்களின் புரோகிதராகிய குப்பு சாஸ்திரி என்பவர் நேற்றுக் காலை என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தார். நாற்காலியில் உட்காரச் சொன்னேன். உட்கார்ந்தார்.

"ஆச்சர்யம்! ஆச்சர்யம்."  என்றார்.

"என்னங்காணும் ஆச்சர்யம்!" என்று கேட்டேன். குப்புசாமி சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்: - "புளியஞ் சாலைக்கு அருகே சத்திரம் இருக்கிறது. தெரியுமா! அங்கே மலையாளத்திலிருந்து ஒரு நம்பூரி பிராமணர் வந்திருக்கிறார். அவருடைய கல்விக்கோர் எல்லையே கிடையாது. நாலு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்திநாலு " கலைஞானம் - ஸகலமும் அவருக்குத் தெரிகிறது" என்றார்.

"இத்தனை விஷயம் அவருக்குத் தெரியுமென்பது உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டேன். குப்பு சாஸ்திரி:-"நேற்று நான் சம்பாஷணை செய்து கொண்டிருந்தேன். ஸம்ஸ்கிருதம்தான் பேசுகிறார். கடல் மடை திறந்து விட்டது போல வார்த்தை சொல்லுகிறார். ஸரஸ்வதி அவதாரமென்றே சொல்லவேண்டும்" என்று அளவில்லாமல் புகழ்ந்தார்.

"அந்த நம்பூரியின் பெயரென்ன?"  என்று கேட்டேன். "அவர் பெயர் ராகவ சாஸ்திரி" என்று குப்பு சாஸ்திரி சொன்னார். "அவரை நம்மிடம் அழைத்து வாரும்" என்று சொல்லி அனுப்பினேன்.

இன்று காலையில் மேற்படி ராகவ சாஸ்திரி வந்தார். குப்பு சாஸ்திரிக்கு பக்கத்து கிராமத்தில் ஏதோ விவாகக் கிரியை நடத்தி வைக்கும்படி நேரிட்டிருப்பதால், அவர் கூட வராமல் இந்த ராகவ சாஸ்திரியை என் வீட்டு அடையாளம் சொல்லி யனுப்பி விட்டாரென்று பின்னிட்டுத் தெரிந்தது.

ராகவ சாஸ்திரியைப் பார்த்தால் பார்ஸிக்காரரைப் போலே யிருந்தது. காலிலே பூட்ஸ், கால்சட்டை, கோட்டு, நெக்டை, டொப்பி - பாதாதிகேசம் வெள்ளைக்கார உடுப்புப் 'போட்டிருந்தார். நான் இவரைப் பார்த்தவுடனே 'பார்ஸியோ யூரேஷியனோ' என்று எண்ணி "நீ யார்" என்று இங்கிலீஷிலே கேட்டேன். "நான் தான் ராகவ சாஸ்திரி. தாங்கள் என்னைப் பார்க்க விரும்பியதாக குப்பு சாஸ்திரி சொன்னார். தாங்கள்தானே காளிதாசர்?" என்று அவர் கேட்டார். 'ஆம்' என்று சொல்லி உட்காரச் சொன்னேன். அவரை ஏற இறங்க மூன்று தரம் பார்த்தேன். என் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. "நீர் பிராமணனா" என்று கேட்டேன். "இல்லை" என்றார். "நீர் நம்பூரி பிராமணன் என்று குப்புசாஸ்திரி சொன்னாரே?" என்றேன்.