ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- ஸ்ரீ நாராயணஸ்வாமி என்பவர் தீயர் ஜாதியில் பிறந்து பெரிய யோகியாய் மலையிலே தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது பல தீயர் அவரிடம் போய், 'ஸ்வாமி, தங்களை மலையாளத்து மஹாராஜாகூட மிகவும் கௌரவப் படுத்தும்படி அத்தனை மேன்மையான நிலைமையிலே இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை இதர ஜாதியார் மிகவும் தாழ்ந்த நிலைமையிலே வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குப் போனால் மற்ற ஜாதியார் எங்களை வெளிப்புறத்திலே நிறுத்துகிறார்கள். நேரே ஸ்வாமி தர்சனம் பண்ண வழியில்லை. எங்களுக்கு ஒரு புகல் சொல்லக்கூடாதா? என்று கேட்டார்கள். அப்போது நாராயணஸ்வாமி சொல்லுகிறார்: ''கேளீர், ஸகோதரர்களே! கோயில் கட்டுவதற்கு நம்பூரிப் பிராமணர் தயவு வேண்டியதில்லை. கல் வேலை தெரிந்த கல்தச்சர் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் கோயில் கட்டிக் கொடுப்பார்கள். ஆதலால், நீங்கள் இந்த விஷயத்தில் வருத்தப்பட வேண்டாம். பணம் சேர்த்துக்கொண்டு வாருங்கள். எத்தனை கோயில் வேண்டுமானாலும் கட்டலாம். நான் ப்ரதிஷ்டை பண்ணிக்கொடுக்கிறேன்" என்றார். இதைக் கேட்டவுடனே தீயர்கள் தமக்குள்ளிருந்த பணக்காரரிடம் தொகை சேர்க்கத் தொடங்கினார்கள். காலக்கிரமத்தில் பெரிய தொகை சேர்ந்தது. இப்போது பல இடங்களில் மேற்படி நாராயண ஸ்வாமி ஆலயப்ரதிஷ்டை செய்திருக்கிறார். என்று சாஸ்திரி சொன்னார். "இவர் கோயில்கள் கட்டினதைப்பற்றி இதர ஜாதியார் வருத்தப்படவில்லையா?" என்று வேதவல்லியம்மை கேட்டாள். "ஆம். அவர்களுக்குக் கோபம் தான். ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு,"பெயரென்ன?" "என்று கேட்டார். "என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்" என்று நாராயணஸ்வாமி சொன்னார். "தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?" என்று நம்பூரி கேட்டார். ''ஆம்'' என்று ஸ்வாமி சொன்னார். "பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்கவேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?" என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:- 'பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப் படவேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை' என்றார். |