பக்கம் எண் :

கலைகள் - மலையாளம் (1)

இவ்வாறு ராகவ சாஸ்திரி மேற்படி நாராயணஸ்வாமியைக் குறித்துப் பல கதைகள் சொன்னார். பிறகு மலையாள பாஷையின் ஆதிகவியாகிய துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரைப்பற்றி கொஞ்சம் வார்த்தை நடந்தது. எழுத்தச்சன் என்றால் எழுத்தின் அச்சன் (தந்தை) என்று பொருள். அந்த எழுத்தச்சன் எத்தனாவது நூற்றாண்டிலிருந்தான் என்ற கால நிர்ணயம் ராகவ சாஸ்திரிக்குத் தெரியவில்லை. இவர் பிறந்த கிராமத்தின் பெயர் ஏதோ சொன்னார்; அது எனக்கு மறந்து விட்டது. இக் காலத்திலே கூட அந்தக் கிராமத்துக்குப் பக்கத்து நாட்டுப்புறங்களிலே எங்கேனும் ஓரிடத்தில் பிள்ளைக்கு அக்ஷராப்யாஸம் பண்ணிவைத்தால் அதற்கு அந்தக்கிராமத்திலிருந்து மண்ணெடுத்துக்"கொண்டு வந்து அக்ஷரம் படிக்கும் சிறுவனுக்குக் கொஞ்சம் கரைத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு என்று மேற்படி சாஸ்திரியார் சொன்னார். துஞ்சத்து எழுத்தச்சன் செய்த ராமாயணத்திலிருந்தும் சில புராணத்திலிருந்தும், மேற்படி ராகவ சாஸ்திரி, சில சுலோகங்களை எடுத்துச்சொல்லிப் பொருள் விளக்கினார். அதன் நடை பழைய தமிழ்; கொச்சையில்லாத சுத்தமான சம்ஸ்கிருதச் சொற்களையும் தொடர்களையும் யதேஷ்டமாகச் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழ் காதுக்கு மிகவும் ஹிதமாகத் தானிருக்கிறது. துஞ்சத்து எழுத்தச்சன் வாணிய ஜாதியைச் சேர்ந்தவராம். இவர் தமிழ் நாட்டிலே போய் கல்வி பயின்றவராம். இவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷயமாகப் பக்திப் பாட்டுகள் பல பாடியிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பாட்டுக்களை மலையாள ஸ்திரீகள் பாடும் போது கேட்டால் மிகவும் இன்பமாக இருக்குமென்று ராகவ சாஸ்திரி சொன்னார்.அவரே மாதிரி கொஞ்சம் பாடிக் காட்டினார்:

"கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்கேணும்        விண்ணோர் புகழ்ந்த நாயிகே, மாயிகே, நீ"

என்று அந்தப் பாட்டின் முதற்கண்ணி சொன்னார். அதாவது:-

'கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்க வேணும், விண்ணோர் புகழும் நாயிகே' என்றவாறு.

''நாயிகே'' என்பது வடசொல். ''நாயகியே என்பது பொருள். ''மாயிகே'' என்றால் ஹே மாயாதேவி என்று அர்த்தம். இது பராசக்தியை நோக்கி கோபிகள் தமக்கு கண்ணனைத்தரும்படி வேண்டிய பாட்டு.

இங்ஙனம் அவர்கள் நெடுநேரம் ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தார்கள். பிரமராய அய்யர் கடைசியாக "ஹிந்து தேசமாகிய ரத்ன மலையில் மலையாளம் ஸாமான்ய ரத்னமன்று" என்றார்.

பிறகு வேதவல்லியம்மை அச்சிகளைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். ஏற்கனவே, ஐரோப்பிய ஸ்திரீகளுக்கு உள்ள விடுதலை (நாயர் ஸ்திரீகளாகிய) அச்சிகளுக்கு உண்டென்று வெளிப்பட்டது. வேதல்லியம்மைக்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. பிரமாயர் பெருமூச்சு விட்டார். உடனே பிரமராய அய்யருக்கும் வேதவல்லிக்கும் சண்டை உண்டாயிற்று. இந்த வியாஸம் ஏற்கனவே நீண்டுபோய்விட்ட படியால், மேற்படி பிரமராயர் வேதவல்லி யுத்தக் கதையை ஸௌகரியப்பட்டால் மற்றொரு முறை எழுதுகிறேன்.