பக்கம் எண் :

கலைகள் - மலையாளம் (2)

அந்த ராகவ சாஸ்திரி இன்னும் ஊருக்குப் போகவில்லை. வேதபுரத்தில் தான் இருக்கிறார். இன்று காலையில் வந்தார். நான் தனியே இருந்தேன். வேறு யாருமில்லை. எங்களுக்குள்ளேயே பேச்சு நடந்தது. மிகவும் நீண்ட கதை. அவர் ஆறுமணி நேரஞ்சொன்னார். எனக்கு ஞாபகமிருக்கிற பாகத்சைச் சுருக்கமாக எழுதுகிறேன்.

நான் கேட்டேன், "சாஸ்திரியாரே, அந்த தீயர் ஸமாஜத்தின் பெயரென்ன?"

சாஸ் - "ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்."

"யோகம் என்றால் சபை என்று அர்த்தமா?"

சாஸ் - "ஆம்."

"அந்த சபை அங்கே, மலையாளத்தில் அதிகமாய் பரவி யிருக்கிறதோ?" என்று நான் கேட்டேன்.

சாஸ் - "ஆம். அதில் ஸ்திரீகளினுடைய யோகம் என்ற பகுதி ஒன்றிருக்கிறது."

"ஓஹோ! புருஷர் ஸமாஜத்தைப்பற்றி முதலாவது பேசுவோம்" என்றேன்.

ராகவ சாஸ்திரி தொடங்கினார். ராகவ சாஸ்திரி சொல்லியது என்னவென்றால்:-

மேற்படி ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்துக்கு வட மலையாளத்தில், கண்ணனூர், மாஹி, கோழிக்கூடு முதலிய இடங்களிலும், தென் மலையாளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் முதலிய இடங்களிலும், கொச்சி ராஜ்யத்திலும், மங்களூரிலும், மலையாள தேசம் முழுதிலுமுள்ள முக்கிய ஸதலங்கள் எல்லாவற்றிலும் கிளைச் சபைகள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னைப் பட்டணத்தில் ஒரு கிளை இருக்கிறது. இந்த வருஷத்துப் பெருங் கூட்டம் சில மாதங்களின் முன்பு திருவாங்கூரில் உள்ள ஆலுவாய் என்ற ஊரிலே நடந்தது. அப்போது பாலக்காட்டிலுள்ள விக்டோரியா காலேஜ் முதல் வாத்தியாராகிய ஸ்ரீமான் பி. சங்குண்ணி அக்ராஸனம் வஹித்தார். இப்போது அவர் செய்த பிரசங்கத்தில் சில குறிப்பான வார்த்தைகள் சொன்னார். அவையாவன:-