பக்கம் எண் :

கலைகள் - மலையாளம் (2)

நாம் பயப்படக்கூடாது. மனம் தளரக்கூடாது. மேற்குலத்தார் நம்மை எத்தனை விதங்களில் எதிர்த்தபோதிலும் நாம் அவர்களைக் கவனியாமல் இருந்து விடவேண்டும். எனக்குப் பாலக்காட்டில் அடிக்கடி கையெழுத்துச் சரியில்லாத மொட்டைக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கடிதங்களில் நான் காலேஜ் வாத்தியாராய் வேலையில் இருக்கக்கூடாதென்றும், அது பிராமணர் செய்ய வேண்டிய தொழில் என்றும், எனது முன்னோர் செய்த தொழில்களாகிய உழவு, விறகு வெட்டுதல், பனை யேறுதல் முதலியனவுமே நான் செய்யத்தக்க தொழில்களென்றும் பாலக்காட்டுப் பிராமணர் சொல்லுவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் கவனியாததுபோலே இருந்து விடவேண்டும். நாம் கீழ் ஜாதி என்ற நினைப்பே கூடாது. எவன் தன்னை எப்படி நினைத்துக்கொள் கிறானோ, அவன் அப்படியே ஆய்விடுகிறான். நாம் மேல் ஜாதியாரை வெல்லவேண்டுமானால், மேன்மைக் குணங்கள் பழகிக் கொள்ளவேண்டும். படிப்பினால் மேன்மை யடையலாம். இங்ஙனம் ஸ்ரீமான் சங்குண்ணி தீயருக்கு நல்ல நல்ல உபதேசங்கள் செய்தார்.

ஸ்ரீீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பெண்களின் கூட்டம் இவ்வருஷத்தில் ஆலுவாயில் நடந்தது. ஆண்களின் கூட்டம் கழிந்த பிறகு, பெண் கூட்டம் நடத்தினார்கள். இதில் திருவாங்கூரின் திவானாகிய ஸ்ரீமான் கிருஷ்ணன் நாயர் அக்ராஸனம் வகித்தார். இந்த ஆலுவாயில் ஒரு நதி ஓடுகிறது. அதன் ஜலம் மிகவும் ரமணீயமானது. வாஸந்த காலத்தில் அவ்வூர் வாஸத்துக்கு மிகவும் இன்பமென்று கருதி வடநாட்டிலிருந்துகூட அநேகர் அங்கே வந்து வாஸம் செய்கிறார்கள். ஆலுவாயில் தீயர் யோகத்தின் பெண் கிளைக்கூட்டம் நடந்தபோது அங்கே கௌரியம்மையென்ற தீய ஜாதிப்பெண் வந்து இங்கிலீஷில் பேசினாள். இவள் பி.ஏ. பரீக்ஷையில் தேறினவள். இவளுடைய பேச்சை எல்லாரும் வியந்தார்கள். தீயர் முன்னுக்கு வந்து மேன்மை பெற முயற்சி செய்வதில் திவான் கிருஷ்ணன் நாயர் மிகுந்த அனுதாபம் காட்டி வருகிறார்.

"தீயர் கள்ளிறக்கும் ஜாதியார் அன்றோ?  தீயருக்கு ஈழுவர் என்ற பெயர் அன்றோ, நமது தமிழ் நாட்டுச் சாணாரைப் போலே?" என்று கேட்டேன்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- "ஆம், சாணாரைப் போல் கள்ளிறக்கும் தொழில் உண்டு. சங்குண்ணி சொல்லியது போலே விறகு வெட்டுதல், உழுதல், மற்றும் வைத்தியம் செய்தல், மந்திரவாதம் செய்தல் இவையெல்லாம் பண்டு தீயர் தொழிலாக இருந்தன. இப்போது தீயர்களில் வக்கீல்கள், உத்தியோகஸ்தர், வாத்தியார், உயர்ந்த தொழில் செய்வோர் இருக்கிறார்கள்."