பக்கம் எண் :

கலைகள் - மாலை (1)

ஸமத்துவம் என்பது யாது?

ஸமத்வக் கொள்கையிலே இரண்டு செய்திகளைப் பற்றிய விசாரணை யுண்டாகிறது. முதலாவது, செல்வத்தை உண்டாக்குதல். இரண்டாவது, அதைப் பங்கிட்டுக் கொடுத்தல்.முதலாவது செய்தியில் தொழிலைப் பற்றிய ஆராய்ச்சி ஏற்படுகிறது. இரண்டாவது செய்தியில் கடவுளைப் பற்றிய பேச்சு.

முதல் விஷயம் திறமைகளின் உபயோகத்தைப் பற்றியது.

இரண்டாம் விஷயம் இன்பங்களைப் பங்கிட்டுக் கொடுப்பதைப் பற்றியது.

திற்மைகளை உபயோகப்படுத்துவதினாலே ஜன வலிமையுண்டாகிறது.

இன்பங்களை நேரே வகுத்தால் ஒவ்வொருவனுக்கும் இன்பம் உண்டாகிறது.

நேரே வகுத்தல் என்றால் ஒன்று போல் வகுத்தல் என்று அர்த்தமில்லை. நியாயமாக வகுத்தல் என்று அர்த்தம். நியாயமே ஸமத்வத்தின் பெயர். நியாயமே முதலாவது ஸமத்வம்.

மேலே கூறிய ஜன வலிமை, ஸர்வஸுகம், என்ற இரண்டும் சேர்ந்தால் ஜனச்செம்மை ஏற்படுகிறது.

ஜனச் செம்மை எப்படியிருக்கும்?

மனிதன் செல்வவானாவான். குடிகள் விடுதலை பெற்றிருப்பர். நாடு உயர்வு பெற்றிருக்கும்.

காதல்

உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது; ஒரேயொரு தெய்வம் முடிவுரை விரிந்து நிற்பது; இது காதல்.

காதலர் பிரிந்திருக்கும் போது அவர்களை ஒருவருக்கொருவர் ஓலை யெழுதலாகாதென்று தடுத்தால் அவர்கள், நமக்குத் தெரியாதபடி, ஆயிரம் ஆச்சரிய வழிகள் கண்டுபிடித்துப் பேசிக் கொள்கிறார்கள். பறவைகளின் பாட்டையும், மலர்களின் கந்தத்தையும், குழந்தையின் சிரிப்பையும், ஞாயிற்றின் ஒளியையும், காற்றின் உயிர்ப்பையும், விண்மீன்களின் கதிர்களையும் காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது?  தெய்வத்தின் படைப்பு முழுதும்காதலுக்குத் தொண்டு செய்யும் பொருட்டே அமைந்திருக்கிறது. உலக முழுதையும் தூதுபோகச் செய்கிற திறமை காதலர்க்குண்டு.

இளவேனிற் காலமே, நான் அவளுக்கு எழுதுகிற ஓலை நீ.உயிரே, நீ கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியானால், தொட்டால் வாடிச்செடியாகி விடு; மனிதனானால், காதல் செய். காதலர் இல்லாவிடின், ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்.