பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழகமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப்பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும்வழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும். சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக்கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல், நடை நேராகச் செல்ல வேண்டும். முன்யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட்டால், பின்பு ஸங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதில் கட்டி முடிந்த வசனங்களையேஎழுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடுபோல ஓரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும்; வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுதிருக்காது. வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்கவேண்டும். இவற்றுள், ஒழுக்கமாவது தட்டுத்தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக்கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும். தமிழ் நாட்டிலே புஸ்தகப் பிரசுரம் தமிழ் நாட்டிலே புஸ்தகம் எழுதுவோரின் நிலைமை இன்னும் சீராகவில்லை. பிரசுரத் தொழிலை ஒரு வியாபாரமாக நடத்தும் முதலாளிகள் வெளிப்படவில்லையாதலால், சங்கடம் நீங்காமலிருக்கிறது. புதிய புஸ்தங்களைப் படித்துப்படித்து, ''பயன்படுமா படாதா'' வென்று தீர்மானம் செய்யவேண்டும். ''நன்றாக விலையாகுமா விலையாகாதா'' என்பதை ஊகித்தறியவேண்டும். ஆசிரியரிடமிருந்து புஸ்தகத்தை முன் விலையாகவோ, வேறுவித உடன்பாடாகவோ, வாங்கிக்கொண்டு தாம் கைம்முதல் போட்டு அச்சிட்டு லாபம் பெறவேண்டும். இந்த வியாபாரத்தை நமது தேச முதலாளிகள் தக்கபடி கவனியாமலிருப்பது வியப்பை உண்டாக்குகிறது. புஸ்தகங்கள் வெளிவரத்தான் செய்கின்றன. "பெருந்தொகையான ஜனங்கள் வாங்கிப் படிக்கத் தான் செய்கிறார்கள். ஒரு ஒழுங்கான பிரசுர வியாபாரம் நடந்தால் ஜனங்களுக்கு நல்ல புஸ்தகங்கள் கிடைக்கும். இப்போது அச்சிடப் பணமுள்ளவர் எழுதும் புஸ்தகங்களே பொதுஜனங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பழைய புஸ்தகங்களிலே ஆச்சரியமானவை பல எழுதப்பட்ட காலத்தில், ஆசிரியர் தனவந்தராக இருந்ததில்லை. மேன்மேலும் ஊக்கத்துடன் நடத்தினால், பிரசுரவியாபாரத்தில் நிறைய லாபம் உண்டாகுமென்பதில் சந்தேகமில்லை. விக்டர் ஹ்யூகோ என்ற பிரெஞ்சு ஞானியின் வசனங்கள் தெய்வம் எப்படிப் பேசுகிறது? உலகத்தில் நடைபெறும் செய்திகளை யெல்லாம் கடைந்து பார்க்கவேண்டும். அதன் ஆணைகள் தெளிவுபடும். ஆனால் இது ரஹஸ்ய பாஷை; எளிதில் அர்த்தமாகாது. சாதாரண மனிதர் இந்தப் பாஷையை மொழிபெயர்க்கத் தொடங்கினால், அதிலே பிழைகள் போடுகிறார்கள்; அவஸரப்படுகிறார்கள். முன்பின் முரணுகிறார்கள்; இடையிடையே சில அமிர்தங்களை விட்டு விடுகிறார்கள். அறிவுடையோர், பொறுமையுடையோர், ஆழ்ந்து சிந்தனை செய்வோர்-இவர்கள் பரபரப்புக்கொள்ளாது, காத்திருந்து காத்திருந்து, மெல்ல மெல்ல மொழிபெயர்த்துப் பார்க்கிறார்கள். இவர்களுடைய மொழிபெயர்ப்பிலே உண்மை அகப்படுகின்றது. |