பக்கம் எண் :

கலைகள் - மாலை (1)

அலங்கார சாஸ்திரம்

எல்லாவித அலங்காரங்களும் உவமையணியின் விஸ்தாரங்களைத் தவிர வேறொன்றுமில்லை; 'உபமாலங்காரமே அலங்கார சாஸ்திரத்தின் பிராணன்? என்று பழைய இலககணக்காரர் சொல்லுகிறார்கள்.

பிரான்ஸ் தேசத்தில் மஹாகீர்த்தி பெற்று விளங்கிய நெப்போலியன் சக்ரவர்த்தியின் மதம் அப்படியன்று. "உவமையணி விரிவணி ஒன்றும் பெரிதில்லை. புனருக்தி (மீட்டுரை) தான் மேலான அலங்காரம். அதாவது, நம்முடைய கக்ஷியைத் திரும்பத் திரும்பத் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும். எதிராளி சொல்லும் பேச்சை கவனிக்கவே கூடாது. நம்முடைய கக்ஷியை ஓயாமல் திரும்பச்சொல்லவேண்டும். அடிக்கடி எந்த வார்த்தை சொல்லுகிறோமோ அந்த வார்த்தை மெய்யாய்ப் போகும்" என்று நெப்போலியன் "சொல்லியதாக ஒரு கதை. லௌகீக காரியங்களிலே இது நல்ல உபாயம் நம்முடைய நியாயத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லுவதினால், பொய் கூட மெய்யாகத் தோன்றும்படி செய்துவிடலாம்.

குண்டூசி வியாபாரம்

ஒருவன் ஊசி வியாபாரம் பண்ணினான். பக்கத்துக் கடையிலே ஒருவன் வாழைக்காய் வியாபாரம். அவனைப் பார்த்து குண்டூசி வியாபாரியும் பகல் வெயில் நேரத்தில் அரைத் தூக்கமாய் கண்ணை மூடிக்கொண்டே சாமான் எடுத்துக் கொடுக்கும் வழக்கத்தைக்கற்றுக்கொண்டான். ஒருநாள் பகல் வெயிலில் குண்டூசிக்காரன் அரைக் கண்ணைத் திறந்துகொண்டு முக்கால் குறட்டையாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது இலேசான கனவு காணலானான். கையிலே வாய் திறந்த குண்டூசி டப்பியொன்று இருக்கிறது. இவன் கனவிலே ஒரு பெண் வந்தாள். அவள் வந்து தன் புருவத்திலும் கண்ணிமையிலும் ஜவ்வாது தடவுவதாகக் கனாக் கண்டான். கையிலிருந்த குண்டூசி டப்பியை கண்ணிலே கவிழ்த்துக்கொண்டு மிகவும் வருத்தப்பட்டான். குண்டூசி வியாபாரம் பண்ணுகிறவன் பட்டப்பகலில் நடுக்கடையில் உட்கார்ந்து தூங்கக்கூடாது.

தூற்றல்

ஓயாமல் தூற்றல் போட்டால் அது மழையாக மாட்டாது. சிணுங்கல் மழையினால் கெடுதிதான் உண்டாகும். தூற்றலாகத் தொடங்கியது மழையாக விரைவிலே பெய்து முடித்துவிடவேண்டும். ஒரு நல்ல காரியம் செய்யத் தொடங்குவோன், அதை ஒரே நீட்டாக வருஷக் கணக்கில் நீட்டி, மற்றவர்களுக்கு அதுவே ஒரு தீராத தொல்லையாகும்படி செய்யலாகாது. "சுபஞ்ச சீக்கிரம்"; நன்மையைத் துரிதப்படுத்தவேண்டும்.

வசனநடை

தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்யவேண்டும். கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.