தர்க்கம் "விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக." (பைபில்.) ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: "பிறர் குணதோஷங்களைப் பற்றித் தர்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப்பற்றி யோசித்தல் வீண்." 'ஹெர்மஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானி:- "மகனே, விவாதத்திலே நேரங்கழித்தல் நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்." 'ஸொக்ராதெஸ்' என்ற கிரேக்க ஞானி:- "அறியாதார் பேச்சை நிறுத்தினாற் கலக மில்லை." ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- "வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்துகொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன்தெரிந்துகொள்ளுவான்." திருவள்ளுவர்:- "யாகாவா ராயினும் நாகாக்க" "சொல்லிற் பயனுடைய சொல்லுக" |