உடம்பைப் பேணுதல் சீன தேசத்து ஞானி 'யாகதஸ்உங் - த்ஸே' என்பவர் சொல்லுகிறார்:- "மண்ணுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்ததோர் விம்பம்; அதன் பெயர்உடம்பு. அதனைத் தெய்வம் " உன் வசம் கொடுத்திருக்கிறது. உன் காவலிலே யகப்பட்டிருக்கும் மண்ணை விண்ணுடன் இசைத்து (ஸம்மேளப்படுத்தி) நடத்துவதேஉயிர் வாழ்க்கையென்று சொல்லப்படும்." ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லுகிறார்:- "உயிரும், உடம்பும்; உள்ளே குணம், வெளியே குறி." 'எபிக்தெதுஸ்' என்ற கிரேக்க ஞானி சொல்லுகிறார்:- "ஆத்ம சக்தியால் ஆத்மாவுக்கு விளையும் பயன் சரீர சக்தியால் உடலுக்கு உண்டாகும்." ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- தர்மிஷ்டர் உடம்பைப் போற்ற வேண்டும். அது ஆத்மாவின் கோயில். நித்யப் பொருள் அதனுள்ளே விளங்குகிறது." ஸ்வாமி விவேகானந்தர்:- "வலிமையுற, நோயின்றி உடம்பைக் காத்தல் அவசியம்.உடம்பு மிகச் சிறந்த கருவி. அதனினும் சிறந்த கருவி உன்னிடமில்லை. ஆதலால், அதை வலிதாக, நோயற்றதாக வைத்துக்கொள். உனது உடம்பு எஃகைப் போல் வலியதென்று பாவனை செய்துகொள். மெலிந்தோருக்கு விடுதலை யில்லை, மெலிவை யெல்லாம் துரத்திவிடு. உடம்பு வலிதென்று அதனிடம் சொல்லு. உன்னிடத்திலே நீ எல்லையற்ற திடமும் நம்பிக்கையும் கொண்டிரு." "மஹாலக்கம்" என்ற பௌத்த நூல் சொல்லுகிறது:- "உடன் பிறந்தோரே! இரண்டுவித மிகையுமில்லாதிருப்போனே விடுதலை பெறுவான். எப்போதும் காமாதி இன்பங்களைநாடுதல் ஒரு மிகை; இஃதிழிந்தது, சிறுமை, மிருகத்தன்மை, ஆபத்து - இந்த வழியிலே பாமரர் செல்லுகிறார்கள். மற்றொரு மிகையாவது உடம்பை மித மிஞ்சிய விரத முதலியவற்றால் வருந்தச் செய்தல். இது துன்பம்; இது வீண். புத்த பகவான் கூறியது, மேற்கூறிய சந்துகளிரண்டினும் வேறான வழி; அது அறிவைத் திறப்பது; தெளிவு தருவது; விடுதலைக்கும், ஞானத்துக்கும்,நிறைவுக்கும் வழி காட்டுவது." யோக ஸூத்ரங்களின் ஆசிரியராகிய பதஞ்ஜலி முனிவர் சொல்லுகிறார்:- "வலிமைகளிலே மதியை நிறுத்தி ஸம்யமம் (ஆழ்ந்த தியானம்) செய்தால் யானையின் பலம் முதலியன கை கூடும்." தமிழ்ப் பழமொழி:- "சுவரிருந்தாலன்றோ சித்திரமெழுதலாம்?" [கருத்து: வெயர்வை சிந்தும்படி நாள் தோறும் உடலை உழைக்கவேண்டும். நன்றாகப் பசித்த பிறகு போஜனம் செய்யவேண்டும். மனதிலே சந்தோஷம் வேண்டும். இவற்றாலே ஒருவன் உடம்பைக் காத்தால் ஒழிய, தர்மம் நடக்காது.] |