பக்கம் எண் :

கலைகள் - ரத்னமாலை

சிலர் கல்வி பழகமாட்டார். சிலர் பழகியும் தேறமாட்டார். சிலர் கேள்வி கேட்க மாட்டார். சிலர் கேட்டும் விடைப்பொருள் தெரிந்துகொள்ள மாட்டார். இவர்களெல்லாம் மனஞ் சோர்ந்து போக வேண்டாம். சிலர் எதையும் தெளிவுறக்காணமாட்டார். சிலர் தெளிந்தும் கலங்குவார். இவர்கள் மனஞ்சோர வேண்டாம். சிலர் அப்யாஸம் செய்வதில்லை. சிலர் செய்தாலும் உறுதி யடைவதில்லை. இவர்கள் மனஞ் சோர வேண்டாம் விடாமுயற்சி ஒன்றிருந்தாற் போதும்; பிறன் ஓரடியிற் செய்வதை இவர்கள் நூறடியிற் செய்வார்கள். பிறன் பத்தடியிற்செய்வதை இவர்கள் ஆயிரம் அடியிற் செய்துவிடுவார்கள். இந்த விடாமுயற்சி விதிப்படி நடப்பவன் எத்தனை மூடனாயினும் மேதாவியாய் விடுவான்; எத்தனை பலஹீனனாயினும் வலிமை பெற்று விடுவான். (கன்பூஷியஸ்).

காலத்தாலும் பொறுமையாலும் முசுக் கட்டை இலை பட்டாய் விடுகிறது. (பாரசீகப் பழமொழி).

உடம்பைப் போல உணர்வும் தான் ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் வழக்கத்தைப் பழக்கத்தினால் அடைகிறது. (ஸொக்ராதெஸ்).

ஆத்ம சுத்தியாகத் தொழிலைச் செய்யுங்கள். அதில் விழிப்போடிருங்கள். விடாமுயற்சி செய்யுங்கள் சிந்தனை யோடிருங்கள். உங்கள் விடுதலையிலே கருத்தைச் செலுத்துங்கள். (மஹா பரி நிர்வாண ஸூக்தம்.)

கடைசிவரை எவன் பொறுத்திருப்பானோ அவன் காக்கப்படுவான். (பைபில்:மத்தேயு.)

விடா முயற்சியாலே ஆத்ம வுடைமை பெறுவீர். (பைபில்: லூக்).

சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான். பெருக விதைத்தவன் பெருக அறுப்பான். (பைபில்: கொரிந்தியார்.)

தேவ யாத்திரை செய்வோன் எப்போதும் அதைரியப் படலாகாது. இஷ்டதேவதையின் அழகை ஒரு லக்ஷ வருஷம் பாடுபட்டுங் காணாவிடின் அப்போதும் அதைரியப்படலாகாது. (பஹா உல்லா.)

எந்த நாளும் அதைரியப்படாமல் இருப்பவனே பெருமை யடைந்து நித்தியானந்தத்தை உண்ணுகிறான். (மஹாபாரதம்.)

நியாயமுள்ள மனிதர் ஏழுதரம் விழுந்தும் மறுபடி எழுகிறான். (பைபில்:பழமொழி.)

நித்யப் பொருளைக் காணும் பொருட்டாக நீ செய்யும் முதன் முயற்சி பயன்படாவிட்டால், அதனால் தைரியத்தை இழந்து விடாதே. விடாமுயற்சி செய்ய தெய்வத்தின் அருள் பெறுவாய். (ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.)