பக்கம் எண் :

கலைகள் - ரத்னமாலை

(பல தேசத்து ஞானிகளின் வசனங்களை 'ஆர்ய' பத்திரிகையில் 'போல் ரிஷார்'  'Paul Richard'  என்ற பிரான்ஸ் நாட்டு வித்வான் தொகுத்தெழுதிவரும் கோவையிலிருந்து 'காளிதாஸன்' மொழி பெயர்த்தது.)

உண்மை நாட்டம், விடாமுயற்சி

தன்னைத்தான் செம்மைப்படுத்திக் கொள்வதில் செலவிடும் முயற்சியின் பயனே மனிதனுக்கு சந்தோஷத்தைத் தரக்கூடியது. ('அந்த் வான்' மருத்துவன்.)

மிகவும் மேல் நிலையிலிருப்போரும் மிகவும் தாழ் நிலையிலிருப்பாரும் எல்லாரும் ஒருங்கே செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு: அதாவது, ஓயாமல் தம்மைத் திருத்திச் செம்மை செய்தல். (கன்பூஷியஸ்.)

தன்னைத் திருத்துவதில் தளர்ச்சியே கூடாது. தான் அறநெறியில் தேர்ந்து விட்டாதாகக் கர்வங்கொள்ளும் போதே, மனிதன் அறத்திலிருந்து நழுவத் தொடங்குகிறான். (சூ-சிங்.)

லாபம் நின்றுபோனால், அப்போது நஷ்டம் ஆரம்பிக்கிறது. வேகத்துடன் ஏறிச் செல்வது பெரிதன்று; எப்போதும் ஏறிச்செல்ல வேண்டும்; அதுவே பெரிது. (ப்ளூதார்க்)

விருப்பமும் நம்பிக்கையும் தூண்டுமிடத்து மனிதன் உயிருக்கு அஞ்சிப் பின்வாங்கலாகாது. பாதையில் ஒரு க்ஷணங்கூடச் சோம்பி யிருக்கலாகாது தாமதம் செய்பவன் பாதையினின்றும் வலிந்து புறத்தே தள்ளப்படுவான். (பரீத்-உத்தீன்-அத்தர்.)

உண்மையை நாடி உழைப்பவன், இடையே சில விசேஷ சித்திகள் பெற்றவுடன் தடைப்பட்டு நில்லாமல், அதற்கு அப்பாலும் முயற்சி செய்தால் கடைசியாக நித்திய ஞானமாகிய செல்வத்தைப் பெறுவான். (ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.)

நான் என்னை உணர்ந்தவனாகக் கருதவில்லை. ஆனால் ஒரு காரியம் செய்கிறேன். கடந்து போனவற்றை யெல்லாம் மறந்து, முன்னே நிற்பவற்றை நாடுகிறேன். பரிசு பெறும் பொருட்டுக் குறியை நோக்கி விரைகின்றேன். (பைபில்:பிலிப்பியர்.)

விடா முயற்சியும் உறுதியும் உடையவருக்கு எதுவும் அரிதில்லை. (லுன்-யூ)

பெறுதற் கரியவற்றைப் பெறவேண்டி அறிஞன் விடாமுயற்சியைக் கைக்கொள்ளுகிறான். (வஒ-த்ஸே).

ஊக்கத்துடன் தேடுகிறவன் காண்பான். (மஹா - உல்லா.)