(பாட்டு) "வெற்றிலை வேண்டுமா, கிழவிகளே?" "வேண்டாம், வேண்டாம், போடா!" "பாக்கு வேண்டுமா, கிழவிகளே?" "வேண்டாம், வேண்டாம், போடா!" "புகையிலை வேண்டுமா, கிழவிகளே?" "வேண்டாம், வேண்டாம், போடா!" "ஆமக்கன் வேண்டுமா, கிழவிகளே?" "எங்கே? எங்கே? கொண்டுவா, கொண்டுவா" இந்தப் பாட்டைக் கேட்டு ஜமீன்தார் மிகவும் சிரித்து "போதும்; போதும்; கொட்டையா, நிறுத்து; நிறுத்து" என்றார். கொட்டையன் ஆட்டத்தையும் பாட்டையும் உடனே நிறுத்தி விட்டான். இப் பாட்டுகளை மிகவும் அற்புதமான நாட்டியத்துடன் கொட்டையன் பாடியது பற்றி ஜமீன்தார்மிகவும் ஸ்ந்தோஷ மெய்திக் கொட்டையனுக்கு ஒரு பட்டுத் துண்டு இனாம் கொடுத்தார். நான் அந்த ஸமயத்தில் அந்த கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்காகப் போயிருந்தேன். அங்கே இந்தச் செய்திகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று ஸாயங்காலம் நான் மறுபடி அந்தக் கோயிலுக்குப் போனேன். அங்கு வெளி மண்டபத்துக் கெதிரே கொட்டையன் நின்றான். காலையில் தனக்கு ஜமீன்தார் இனாம் கொடுத்த பட்டுத் துண்டைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து இரண்டு கைகளிலும்"நாலி நாலியாகக் கட்டிக் கொண்டிருந்தான். நான் அவனை நோக்கி:- "ஏன், கொட்டைய சாமியாரே, பட்டை ஏன் கிழித்தாய்?"என்று கேட்டேன். இதைக் கேட்டுக் கொட்டையன்: "பாட்டைக் கிழித்தவன் பட்டாணி -அதைப் பார்த்திருந்தவள் கொங்கணச்சி - துட்டுக் கொடுத்தவன் ஆசாரி - இந்தச் சூழ்ச்சியை விண்டு சொல், ஞானப்பெண்ணே" என்று பாடினான். "இதற்கென்ன அர்த்தம்?" என்று கேட்டேன். கொட்டையன் சிரித்துக் கொண்டு மறுமொழி சொல்லாமல் ஓடிப் போய்விட்டான். காலையில் ஜமீன்தாரிடம் பட்டுக்கு மேலே இவன் கொஞ்சம் பணமும் கேட்டதாகவும், அவர் கொடுக்க முடியாதென்று சொன்னதாகவும், அந்தக் கோபத்தால் இவன் பட்டைக் கிழித்துக் கைகளில் நாலி நாலியாகத் தொங்கவிட்டுக் கொண்டதாகவும், பின்னாலே பிறரிடமிருந்து கேள்விப்பட்டேன். "கொட்டைய சாமி" என்ற சிறிய கதை முற்றிற்று. |