பக்கம் எண் :

கலைகள் - மாலை (2)

"எனக்கு ஐரோப்பிய ஸங்கீதம் ரஸப்படவில்லை; நன்றாகத்தானிருக்கிறது; ஆனால், "ஸர்க்கஸ்" வேடிக்கை எப்படி ஒழுங்காகவும் நன்றாகவுமிருக்கிறதோ அதே மாதிரி. ஒரு பெரிய பாட்டுக்காரி இங்கிலாந்தில் கச்சேரி நடத்தும் போது நான்கேட்கப் போனேன். பாடிக்கொண்டு வரும் போதே பக்ஷிகள் கத்தும் ஒலிகளைக் காட்டத் தொடங்கினாள். எனக்கு சிரிப்புப் பொறுக்க முடியவில்லை. பெருங்கேலியாக இருந்தது. ஆண் பாட்டு இத்தனை மோசமில்லை.

"நெடுநாள் பழக்கத்தினால் இப்போது எனக்கு ஐரோப்பிய ஸங்கீதத்தின் பொருள் விளங்கத்தான் செய்கிறது. ஆனால் நம்முடைய ஸங்கீதத்தின் வழி வேறு, அவர்கள் வழி வேறு. அது ஜடம்; நம்முடையது ஸூக்ஷ்மம். அது லௌகீகம்;நமது பாரமார்த்திகம். அந்த ஸங்கீதத்திலே மானுஷீக சக்திஅதிகமிருக்கிறது; நமது ஸங்கீதத்திலே தெய்வசக்தி விளங்குகிறது."

மேலே ரவீந்திரர் வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்க்கவில்லை. ஸாராம்சத்தை எனது பாஷையில் எழுதியிருக்கிறேன். 'நம்முடைய ஸங்கீத சாஸ்திரம்ஐரோப்பிய சாஸ்திரத்தை விட மேலானது' என்று ரவீந்திரர் சொல்லும் வார்த்தை முழுவதும் உண்மையென்பது இரண்டு முறைகளிலும் பழக்கமுடைய பண்டித ரெல்லாருக்கும் தெரிந்த விஷயமேயாம். ஆனாலும், நமது தேசத்து வித்வான்கள் கண்டப் பயிற்சி, ஸபா நாகரீகம் என்ற அம்சங்களில் ஐரோப்பியருக்கு ஸமானமாகும்படி முயற்சி செய்தால் நல்லது. ஜனங்களுக்கு இன்பம் அதிகப்படும்; பாடுவோருக்கு பணம் அதிகப்படும்.