பக்கம் எண் :

தத்துவம் - நவராத்திரி - 2

ஒவ்வொருவனுக்கும் மூன்றுவிதச் சக்தி வேண்டும்:

1. அறிவு, 2. செல்வம், 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இஹலோகத்திலே கிடைக்கும்படியாகவும் இதனால் பரலோக இன்பங்களுக்கும் சாத்தியமாகும்படியாகவும், நாம் தெய்வத்தை வழிபடுகிறோம். முக்திக்கு, மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி; இஹலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி, இன்பங்கள் வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டுவாங்கிக் கொள்வது மற்றொரு வழி. சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்?  அர்சுனன் தனக்குச் சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்?ஸ்ரீீகிருஷ்ணனிடத்திலே கேட்டான். ஸ்ரீகிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்.

இஹலோகத்தில் எல்லாவிதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத்திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம். "தெய்வமே, நான் தூங்குகிறேன். நீ எனக்கு மாம்பழம் கொடு" என்று கேட்கவில்லை. "தெய்வமே !  தெய்வமே!  மாம்பழ விஷயத்தில் எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே!  உனக்குப் புண்ணிய முண்டு. மா விதை எங்கே அகப்படும்?  ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது?சொல்லு. பாடுபடச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம். ஆனால் மாம்பழம் கொடுத்துத் தீரவேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுத்தினாய்?" என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி. தெய்வம் உதவி செய்யும்.

விக்கிரமாதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீ மந்நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி, பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி; மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ஙனம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷப் பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?