பக்கம் எண் :

கலைகள் -  ஸங்கீத விஷயம்

இங்குள்ள ஜந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக்குந்தான் பாடத் தெரியும். மற்ற மிருகங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்பதால், அவற்றின் மன நிலை ஸங்கீதத்திற்கு இசைகின்றது போலும்! மனிதன் உடம்பினாலே பறக்காவிட்டாலும், உள்ளத்தைத் திசை வெளியிலேபறக்கும்படி செய்கிறான். அப்போது, இயற்கையிலேயே பாட்டுத் தோன்றுகிறது.

ரஸங்கள் ஒன்பது:

(1) வீரம்,(2) ரௌத்திரம் (கோபம்),(3) அத்புதம் (வியப்பு),(4) சாந்தம் (நடுவுநிலை),(5) பயாநகம் (அச்சம்),(6) பீபத்ஸம் (வெறுப்பு),(7) ஹாஸ்யம் (நகை),(8) கருணை, சோகம் (துயரம்): இதை 'அவலம்' என்பது பழைய தமிழ்    வழக்கு.(9) சிருங்காரம் (காமம்).

வெளிப்பொருள்களைக் காணும்போது அல்லது நினைக்கும் போது மனிதனுடைய உள்ளத்திலே இந்த ஒன்பது சுவைகளில் ஏதேனும் ஒன்று தோன்றும். இரண்டு மூன்று கலந்தும் தோன்றக்கூடும். ரஸ உணர்ச்சியிலே உள்ளத்தை முழுதும் ஈடுபடுத்தக்கூடிய சிலர் கவிதை, பாட்டு. சித்திரம் முதலிய தெய்வக் கலைகளிலே சிறப்படைகிறார்கள். ரஸ உணர்ச்சி இல்லாவிடின், இக்கலைகள் நசித்துப் போகும்.

பிறர் துன்பத்தைக் காணும்போது தனது துன்பம் போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும் பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப் பழகுவாராயின், முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்; பிந்தியவன் பதங்களைப் பின்னுவான்; இவனுடைய தொழிலிலே கவிதை இராது. இப்படியேதான ஒவ்வொன்றிலும்.

ரஸ ஞான மில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்து ஸங்கீத வித்வான்களிலே பலர் 'ஸங்கீதத்திற்கு நவரசங்களே உயிர்' என்பதை அறியாதவர்.