பக்கம் எண் :

கலைகள் -  ஸங்கீத விஷயம்

முத்துவாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன் பாடுவோரே 'முதல்தர வித்துவான்.'  இந்தக் கீர்த்தனங்களெல்லாம் ஸம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி 'வித்வான்'களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள்.அர்த்தமே தெரியாதவனுக்கு 'ரஸம்' தெரிய நியாயம் இல்லை.

நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம்' என்று ஆரம்பஞ் செய்கிறார். 'ராமநீ ஸமான மெவரு' "'மரியாத காதுரா' 'வரமு லொஸகி'...........ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ. எந்த 'வித்வான்' வந்தாலும், இதே கதைதான் தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற் காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

'பூர்வீக மஹான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டும்' என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச் சொல்லவேண்டும். விழுங்கி விடக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையேஓயாமற் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்து விடக்கூடாது.

புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப்பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில்கீர்த்தனங்கள் செய்ய முயலவேண்டும். நவரஸங்களின் தன்மைகளையும், இன்னின்ன ரஸங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

'பூர்வ காலத்து மஹான்களுக்குத் தெய்வப் பிரஸாதமிருந்தது. எங்களுக்கில்லையே. என்ன செய்வோம்?' என்று புதிய வித்வான்கள் புதிய கீர்த்தனங்கள் அமைப்பதிலே பின் வாங்கக்கூடாது. தெய்வங்கள் இறந்து போகவில்லை. இப்போதும் அவற்றை உபாஸனை செய்து அவற்றின் அருள் பெறலாம். தெய்வப் பிரஸாதத்தை ஒருவன் பக்தியாலும், ஜீவதயையாலும், நேர்மையாலும், உண்மையாலும், இடைவிடாத உழைப்பினாலும் ஸம்பாதிக்க முடியும்.

"நாட்டிலே ஸங்கீதத்திற்குச் சரியான போஷணை செய்யும் ராஜாக்களும் பிரபுக்களும் இல்லை. எங்களுக்கு ஜீவனமோ கஷ்டமாயிருக்கிறது. மனக்கஷ்டம் இல்லாமல் இருந்தாலன்றோ ரஸஞானத்தை வளர்த்துக் கொண்டு போகலாம். சில வருஷங்களுக்குள்ளே சில கீர்த்தனங்களை வரப்படுத்திக்கொண்டு ஜீவனத்திற்கு வழிதேடவேண்டிய ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்யலாம்?" என்று நினைத்து மனமுடைந்து போகவேண்டாம்.