பக்கம் எண் :

கலைகள் - ஸங்கீத விஷயம்

இப்போது உலக முழுவதிலுமே ராஜாக்களையும் பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வான்களுடையகடமை. பிறகு, நல்ல போஷணை கிடைக்கும். ஒரு பிரபு மாதம் ரூபாய் 100 கொடுப்பான். ஊர் சேர்ந்தால் தலைக்குக் கால் ரூபாயாக வசூல் பண்ணி மாதம் 1000 ரூபாய் கொடுக்கும்.ஊரையே யஜமானாகக் கொள்ள வேண்டும்.

ஊர்தான் ராஜா. இந்த ராஜாவுக்கு ஆரம்பத்திலே கொஞ்சம் ஞானம் அளித்துப் பழக்கங்கொடுத்தால், வித்தைகளுக்கு எவ்விதமான குறைவும் ஏற்படாது. நவரஸங்களும் சேரவேண்டும். கருணா ரஸமும் (அதாவது சோகரஸமும்) சிருங்கார ரஸமுந்தான் நமது தேசத்தில் நடைபெறுகின்றன. மற்ற வீரம், கோபம் (ரௌத்ரம்) வியப்பு, வெறுப்பு, அச்சம், நகைப்பு, சாந்தம் என்ற ரஸங்களின் விலாஸம் பாட்டிலே காணப்படவில்லை. நல்ல பாட்டுப் பாடினால்நல்ல மதிப்புத் தானாகவே வரும். அதிலிருந்து நல்ல வரும்படி ஏற்படும்.

திருஷ்டாந்தமாக: ஹாஸ்ய ரஸம் தோன்றும்படி ஒரு ராகத்தை விஸ்தரிக்கும்போது, அதிலே அர்த்தச் சேர்க்கையில்லா விடத்தும் ஜனங்கள் கடகடவென்று சிரிக்க வேண்டும்.

ரௌத்ர ரஸம் தோன்றும்படி பாடினால், அதைக் கேட்கும்போது, ஜனங்களுக்கு மீசை துடிக்கவேண்டும்; கண்கள் சிவக்கவேண்டும்.

வீர ரஸமுள்ள பாட்டை ஒரு வித்வான் பாடும்போது, ஜனங்களெல்லாம் தம்மை யறியாமல் முதுகு நிமிர்ந்து தலைதூக்கி உட்காரவேண்டும். அவர்கள் விழியிலே வீரப் பார்வை உண்டாகவேண்டும். அப்போதுதான் பாட்டு ஸபலமாகும்.

பொருளிலும், ஓசையிலும் 'ரஸம்' கலக்காத பாட்டு இனிமேல் தமிழ்நாட்டிலேயே வழங்கலாகாது.

முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர்-இந்த மூன்று பெயருடைய கீர்த்தனைகளைத் தான் வழக்கத்தில் அதிகமாய்ப் பாடுகிறார்கள். இவற்றுள்ளே, தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை ஸமஸ்கிருத பாஷையிலே எழுதப்பட்டவை. இவை கங்கா நதியைப்போலே கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடையன. வேறு பல நல்ல லக்ஷணங்களும் இருந்தபோதிலும்,ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருப்பதால் இவை நமது நாட்டுப் பொது ஜனங்கள் ரஸானுபவத்துடன் பாடுவதற்குப் பயன்படமாட்டா.