தியாகையர் தெய்வ வரம் பெற்றவர். தியாகையர் ரஸக்கடல். கர்நாடக ஸங்கீதம் இப்போது உயிர் தரித்திருப்பதற்கு அவரே காரணம். பூர்வகாலத்து ஞானிகளைப் போலே, இவர் இஷ்ட தேவதைக்கு ஆத்ம யக்ஞம் செய்து, தான் அற்றுவித்தை வடிவாகி விளங்கினர். இவருடைய பாட்டுக்களை இக்காலத்துப் பாடகர் அதிக 'ஸங்கதி'களாலும் ரஸநாசத்தாலும், சொற்களைத் திரித்தல், விழுங்குதல் முதலிய செய்கைகளாலும் இயன்றவரை ஆபாஸமாக்கிவிட்டபோதிலும், இன்னும் அவற்றிலே பழைய ஒளி நிற்கத்தான் செய்கிறது. குப்பையிலே கிடந்து மாசேறிஒளி மங்கிப் போயிருந்தபோதிலும், மாணிக்கத்தின் குணம் ரத்னப்பரீக்ஷைக்காரனுக்குத் தெரியாதா? அதுபோலவே, ரஸ உண்மை தெரிந்தோர் இத்தனை குழப்பத்துக்கிடையே தியாகையருடைய "தொழிலின் ஸ்வரூபத்தை நன்கு கண்டு பிடித்துக்கொள்ள முடியும். கீர்த்தனத்தில் ராக தாளங்களை இசைத்திருக்கிற மாதிரியிலேயே அர்த்தம் தொனிக்க வேண்டும். அதைத்தான் ரஸச்சேர்க்கை என்றுசொல்லுகிறோம். இதிலே தியாகையர் மிகவும் சிறப்புக் கொண்டவர். திருஷ்டாந்தமாக, 'சக்கனி ராஜமார்க்கமு' என்ற கீர்த்தனத்தை எடுத்துக் கொள்வோம். அதிக ஸங்கதிகளும், பின்னல்களும் இல்லாமல் இதன் பல்லவியை சுத்தமாகப் பாடிப் பாருங்கள். "நல்ல ராஜமார்க்கம் இருக்கும் போது சந்துகளில் ஏன் சுற்றுகிறாய், மனதே?" என்று அர்த்தம் இந்த இசையிலே அகப்படும். 'மாருபல்க குன்னாவேமி' (ஏன் மறுமொழி சொல்லாமல் இருக்கிறாய்?) என்ற கீர்த்தனத்தின் பல்லவியைப் பாடிப் பாருங்கள், அந்த அர்த்தம் இசையிலே தொனிக்கும். 'நன்னு ப்ரோவ நீகிந்த தாமஸமா' (என்னைக் காக்க உனக்கு இத்தனை தாமஸமா?) என்ற பல்லவி எடுத்த வுடனேயே அர்த்தம் பளீரென்று வீசும். இப்படியே எல்லாக் கீர்த்தனங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி ஏற்படுத்தவேண்டும் என்று தியாகையர் சிரமப்பட்டு வேலை செய்யவில்லை. நெஞ்சிலே உண்மையிருந்ததால் ஸங்கீதம் இயற்கையிலே இவ்விதமாகப் பிறக்கும். பிற்காலத்தில், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலானவர்களின் பாட்டிலே இந்த லக்ஷணம் இல்லை. 'வரமுலொஸகி' என்ற பாட்டை எடுத்தீர்களானால்,இசைக்கும் பொருளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது விளங்கும். சொற்கள், 'வரங்கொடுத்துக்காப்பது உனக்கு அரிதா?' என்று கேட்கின்றன. இசை சண்டைததாளம் போடுகிறது. இது நிற்க. வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளைத் தெரிந்துகொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுகளை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்துபோகும்படி நேரிடும் |