பக்கம் எண் :

கலைகள் - ஸங்கீத விஷயம்

மேலும், 'பாட்டுக்குத் தாளமே யொழிய தாளத்திற்குப் பாட்டில்லை' என்ற விஷயத்தைப் பாடுவோர் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். சிலவிதக் கூத்துக்களிலே,தாளத்திற்குப் பாட்டுப் பாடுதல் பொருத்தம். அங்கேகூட, முழுதும் தாள நயத்தையே கருதி இசை நயத்தை நாசம் செய்துவிடக்கூடாது. அப்படியிருக்க, 'பாட்டுக் கச்சேரி' என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கே இசையின்பங்களைக் கொன்று தாள முழக்கத்தைப் பிரதானமாக்குதல் தகாது. அதிலும் கீர்த்தனங்களைப் பாடும்போது இசையின்பங்களைக் காட்டுதல் முதல் காரியமாகவும், தாளத்தை உபகரணமாகவும் கொள்ளவேண்டும்.

சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீ காசியில் வாஸஞ் செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம்நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிரமற்றப்படி பொதுவாக வித்வான்களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்று போல எல்லோருக்கும்இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும்இருப்பதன் காரணமென்ன? இதைப்பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன். "வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள்: புளியும் மிளகாயும் சேர்ப்பதில்லை; இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலே தான் தொண்டை கேட்டுப் போகிறது" என்றனர். பின்னிட்டு, நான் யோசனை செய்து பார்த்ததில், 'மேற்படி காரணம் ஒரு சிறிது வாஸ்தவம் தான்' என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்யவேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும்.சாஸ்திரப்படி ஆஹார ஸாதனம் செய்யும் வழக்கம் தென்னாட்டிலே குறைவுபட்டிருக்கிறது.

தவிரவும், உள்ளத்திலே வீரம் இருக்கவேண்டும். உள்ளத்திலே ஸத்து இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரே வராது. கலைகள் நேர்ப்படுவதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. உள்ளத்திலே தைர்யம், ஸந்தோஷம், வலிமை முதலிய சுப லக்ஷணங்கள் தமிழரைக் காட்டிலும் வடநாட்டு ஜனங்களிடம் சிறிது அதிகமாகத் தோன்றுகின்றன. முன்னெல்லாம் தமிழ் நாட்டிலேதான் இந்த குணங்கள் மிகவும் விசேஷமாக விளங்கின. இப்போது சில வருஷங்களாகக் குறைவு பட்டிருக்கின்றன. இந்த குணங்களை நமது ஜனங்களெல்லோருமே பயிற்சி செய்து கொள்ள வேண்டும். ஸங்கீத வித்வான்கள் இவற்றைப் பழக்கப் படுத்தினால் தான், அவர்கள் கண்டத்தில் உவகையும் வீரமும் பிறக்கும்; பாட்டிலே களையுண்டாகும்.