பக்கம் எண் :

கலைகள் - ஸங்கீத விஷயம்

தமிழ்நாட்டு வித்வான்களுடைய ஸங்கீதத்தைப் பற்றி மேலே எழுதினேன். மற்ற சாதாரண ஜனங்கள் பாடும் பாட்டைப்பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். இந்தப் புதிய பகுதி தொடங்கு முன் மேற்படி சங்கீதவித்வான்களிடம் உள்ள நன்மையையும் சொல்ல வேண்டாமா?பெயர்கள் குறிப்பிடாதது பற்றி மன்னிப்பு வேண்டுகிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நாட்டில் உள்ள ஜில்லாக்களிலே ஒவ்வொன்றிலும் இக்காலத்தில் கருவிகளிலும்வாய்ப்பாட்டிலும் புகழ்பெற்ற வித்வான்கள் பலர் இருக்கின்றனர்.

காலத்தின் சீர்க் கேட்டாலும், ஸம்ப்ரதாய பழக்கத்தினாலும் நவரஸங்களுக்கும், பாட்டுக்கும் உள்ள " தொடர்பை மறந்து விட்ட போதிலும், இவர்களிலே சிலர் (ஆணும் பெண்ணும்) ஸரஸ்வதி கடாக்ஷத்தினால் தம்மை அறியாமலே அற்புதமான வேலை செய்கிறார்கள். சிலர் சமயங்களில் ஓரிரண்டு ரஸங்களைத் தெரிந்தே பாட்டில்இசைக்கிறார்கள். அப்போது இவர்களுடைய பாட்டு அல்லது வாத்தியம் மிகவும் உயர்ந்த நிலையடைகிறது. ஸமீப காலத்தில் இறந்துபோன மஹா வைத்யனாதய்யர், புல்லாங்குழல் சரப சாஸ்திரி முதலிய மஹான்களுக்குஇப்போது தக்க பின்காப்பாளர் இல்லாமற் போகவில்லை.

ஆனால், இவர்கள் நான் முன்னிரண்டு பகுதிகளில் குறிப்பிட்ட செய்திகளையும் தயவுசெய்து கவனிக்கும் பக்ஷத்தில் தமிழ்நாட்டுக்கு இவர்கள் செய்துவரும் உபகாரம் பலமடங்கு அதிகப்படுமென்பதும் அப்படி அதிகப்பட வேண்டுமென்பதும் என்னுடைய கருத்து; அதைத் தெரிவித்துக் கொண்டேன்.

இனி சாஸ்திரோக்தமாகப் பாடும் வித்வான்கள் அல்லாமல், ஸாமான்யமாகப் பாடும் பொது ஜனங்களுடைய செய்தியைப் பார்ப்போம்.