முதலாவது, நமது குடும்ப ஸ்திரீகளின் பாட்டையெடுத்துக் கொள்வோம். கல்யாணப் பாட்டுக்கள், கும்மிப் பாட்டுகள் முதலியவற்றுடன் நமது பெண்கள் "கீர்த்தனை" வகைகளும் கொஞ்சம் பாடுகிறார்கள். இதில், ஒரு சில பெண்கள் நல்ல லக்ஷணத்துடன் பாடுகிறார்கள் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால், பெரும்பான்மையோர் ஸங்கீத லக்ஷணமே தெரியாமல் தவறாகப் பாடுகிறார்கள். பெரும்பான்மையோருக்குத் தொண்டை நன்றாகப் பழகவில்லை. பெரும்பான்மையோருக்குப் படிப்பு மிகவும் "குறைவாகவும் சூனியமாகவும் இருப்பதால் இவர்கள் பாடும் பாட்டுக்களிலே சொற்பிழையும் பொருட்பிழையும் மொய்த்துக் கிடக்கின்றன. அதிலும், இவர்கள் திக்ஷிதர், தியாகையர் முதலியவர்களின் கீர்த்தனங்கள் பாடும்போது, தாளம், சுருதிஒன்றையும் கவனிக்காமல் பதங்களைச் சூறையாடி மிகவும் விகாரப்படுத்தி விடுகிறார்கள். ஆனாலும், ஆனாலும், ஆனாலும் தமிழ் நாட்டு ஸ்திரீகளின் ஸங்கீதத்தை நாம் புகழா திருக்கலாகாது. இவர்கள் பாடும் பாட்டிலே பெரும்பான்மைக் கீர்த்தனங்களும், பத்யங்களும் தெலுங்கில் இருந்த போதிலும், தமிழ்ப் பாட்டுத்தான்அதிகமாகப் பாடுகிறார்கள். இந்தத் தமிழ்ப் பாட்டிலே பலபிழைகள் மலிந்து கிடந்தாலும், ஒரு சில பாட்டுக்கள் மிகவும் நன்றாக அமைந்திருக்கின்றன. 'ஓடம்' முதலியவற்றில் அதிஸமீப காலத்துப் பாட்டுக்கள் மிகவும் விகாரமாயிருந்தாலும், பழைய காலத்துப் பாட்டுக்களிலேயே "சொல் நயம் அதிகம் இருக்கிறது. பின்னிட்டு "ரயில் வண்டி ஓடம்" முதலிய அசுத்தங்கள் அதிகமாகச் சேர்ந்து விட்டன. இங்கிலீஷ் படித்த புருஷர்கள் கேட்டு மடத்தனமாகச் சந்தோஷப்பட்டதிலிருந்து பெண்களுக்கு இந்த மாதிரி விரஸங்களிலே பற்றுதல் உண்டாயிற்று. கும்மிப்பாட்டு, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலங்குப் பாட்டு, பள்ளியறைப்பாட்டு, அம்மானைப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்ணமெட்டு. தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக்கூடிய இன்பமா? ஞாபகம் இல்லையா? தமிழ்ப் பெண்களின் பாட்டைக் கையெடுத்து வணங்குகிறோம். ஆனால் அதில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பல இருக்கின்றன. |